Asianet News TamilAsianet News Tamil

கிராமப்புற இளைஞர்களுக்கும் சிறந்த தொழில் வாய்ப்பைத் தரும் அலங்கார மீன் வளர்ப்பு…

Ornamental fish farming that gives rural youth the best career opportunity ...
Ornamental fish farming that gives rural youth the best career opportunity ...
Author
First Published Jul 24, 2017, 12:50 PM IST


விதவிதமான, அழகான, வண்ணங்களைக் கொண்ட சிறு மீன்களை கண்ணாடித் தொட்டிகளில் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. உயிருள்ள காட்சி பொருளாக இருப்பதால் இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவருகின்றன.

அலங்கார மீன்களை பொழுது போக்கிற்காக வளர்த்த காலம் மாறி அது நல்ல தொழிலாக மாறியிருக்கிறது. இந்த மீன்களை இனப்பெருக்க அடிப்படையில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் மற்றும் குட்டியிடும் மீன்கள் என்று பிரிக்கலாம்.

குட்டியிடும் மீன்களில் மோலி, கப்பீஸ், பிளாட்டி மற்றும் வாள்மீன்கள் முக்கியமானவை.

மோலி:

இந்த மீன்கள் 9 செமீ வரை உப்புத்தன்மையுடைய தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. 24 முதல் 28 சென்டிகிரேட் வெப்பநிலையில் வளரும். இவை தாவர வகை உணவுகளையே விரும்பி உண்ணும். மோலி வளர்க்கும் தொட்டிகளில் ஒரளவு சூரிய ஒளி படும் வகையில் இருந்தால் பச்சை பாசிகள் வளரும்.

இது மீன்களுக்கு உணவாகும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 முதல் 5 பெண்மீன்களை விடுவது நல்லது. இவை 5 முதல் 10 வார இடைவெளியில் குட்டிகள் போடும். இதில் சில்வர் மோலி, கருமோலி, வெள்ளைமோலி, ஆரஞ்சு மோலி, சாக்லேட் மோலி, செயில் துடுப்பு மோலி ஆகியவை முக்கியமானதாகும்.

கப்பீஸ்:

இதில் ஆண்மீன்கள் சிவப்பு, பச்சை, கருப்பு,நீலம் மற்றும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த மீன்களை பராமரிப்பது எளிது. அதிகமான வெப்பநிலையை தாங்கி வளரும். ஆண்மீன்கள் 2.5 சென்டிமீட்டர்நீளம் வரையிலும், பெண்மீன்கள் 5 செ.மீ நீளமும் வளரக்கூடியது. பெண்மீன்கள் 2.5 செமீ மற்றும் ஆண்மீன்கள் 2 செ.மீ வளர்ந்தவுடன் இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன.

இந்த மீன்கள் நன்கு வளரவும், இனப்பெருக்கம் செய்யவும் 22 முதல் 24 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காரஅமிலத்தன்மை 7 முதல் 8க்குள் இருப்பது நல்லது. இந்த மீன்கள் 4 லிருந்து 6 வாரத்திற்குள் குட்டியிடும். பெண்மீன்கள் தாமாகவே தொடர்ந்து குட்டியிடும் தன்மையுடயவை. அலங்கார மீன்வளர்ப்பில் புதிதாக ஈடுபடுவோர் முதலில் இந்த வகை மீன்களை வளர்ப்பது நல்லது.

பிளாட்டி

பளிச்சிடும் சிவப்பு, பச்சை, நீலப்பச்சை ஆகிய நிறங்களில் பிளாட்டி மீன்கள் காணப்படுகின்றன. ஆண்மீன்கள் 3.8 செ.மீ வளரும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 பெண்மீன்கள் விடுவது நல்லது. இவை 3,4 வரை இடைவெளியில் குட்டியிடுகின்றன.

வாள்வால் மீன்

பிளாட்டி மீனை போன்று இருக்கும் இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆண்மீன்களில் வால்துடுப்பு, வாள் போன்று நீட்டிக் கொண்டிருக்கும். ஆண்மீன்கள் 8.3 செ.மீ, பெண்மீன்கள் 12 செ.மீ நீளம் வரையும் வளரக்கூடியன. பெண்மீன்கள் 5 செ.மீ நீளத்திற்கு வளரும் போது இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. உயிர் உணவுகளையும், தாவர உணவுகளையும் விரும்பி உண்ணும்.

இனப்பெருக்கம்

இனப்பெருக்கத்திற்கு தகுதியான ஆண்மீன்களை அவற்றின் இனப்பெருக்க உறுப்பை கொண்டு அடையாளம் காணலாம். ஆண்மீன்களின் இனப்பெருக்க உறுப்பை கோனோபோடியம் என்று அழைப்பார்கள். ஒரு முறை கருவுற்ற பெண்மீன், 5லிருந்து 6 வாரத்திற்கு ஒரு முறையாக 8 முதல் 10 முறை குட்டியிடும் தன்மை கொண்டது.

கருவுற்ற சினை பெண்மீன்களுக்கு வயிறு நன்கு பருத்திருக்கும். பெண்மீன்களின் குதத்திற்கு அருகில் கருமையான புள்ளி ஒன்று காணப்படும். இவ்விரு அறிகுறிகளையும் வைத்து கருவுற்ற மீன்களை அடையாளம் காணலாம்.

ஒரு நேரத்தில் ஒரு பெண்மீன் 50 குட்டிகள் வரை இடும். குட்டிகளின் எண்ணிக்கை, பெண்மீன்களின் நீளத்தையும், வயதையும் பொறுத்து மாறுபடும். பொதுவாக குட்டியிடும் மீன்களை 5-6 வாரத்திற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்தல் நல்லது.

ஒரே தொட்டியில் ஆணும்,பெண்ணும் சேர்த்து வளர்க்கப்பட்ட மீன்களிலிருந்து சேர்க்கை மூலம் கருவுற்ற பெண்மீன்களை வயிறு பெரிதாக காணப்படுவதன் மூலம் அடையாளம் கண்டு அவற்றை தனியாக பிரித்தெடுத்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். சத்தான குறுணை உணவு, புழு போன்றவற்றை அளித்து வந்தால் 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறையென தொடர்ந்து குட்டிகளை பெற்றுக் கொண்டேயிருக்கும்.

சரியான அளவுள்ள கண்ணாடி தொட்டியை நீரால் நிரப்பி, தேர்வு செய்யப்பட்டுள்ள கருவுற்ற பெண்மீனை தொட்டியில் இருப்பு செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தாய்மீன், குட்டிகளை இடை இடையே வெளியிடும். முழுவதுமாக குட்டிகளை வெளியிட்டதும், தாய்மீனை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும், குட்டிகளை பெரிய தொட்டிக்கு மாற்றி, குறுணை உணவுடன் மிதவை நுண்ணுயிரிகளையும், புழுக்களையும் அளித்து வரலாம்.

நாற்றாங்கால் குளங்கள் அமைத்து அவற்றில் தகுந்த அளவில், சாணம் மற்றும் ரசாயன உரங்கள் இட்டு, மிதவை நுண்ணுயிரிகளை இருப்பு செய்யலாம். அந்த குளங்களில், பிறந்த இளங்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் துரித வளர்ச்சி அடைய செய்யலாம். குட்டியிடும் மீன்கள் தான் ஈன்ற குட்டிகளையே உண்ணும் தன்மை உடையவை. எனவே தாயிடமிருந்து குட்டிகளை காப்பாற்றுவது முக்கியம்.

இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ள பெண்மீன்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. தவறுதலாக கையாள்வதால் குட்டிகள் முழுவளர்ச்சி அடையாமல் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

வண்ணமீன் வளர்ப்பு மூலம் கிராமப்புற இளைஞர்கள் சிறந்த தொழில்வாய்ப்பை பெறலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios