குமிழ் மரம் பயிரிட நிலம் :

குமிழ்மரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரை உள்ள நிலப்பகுதிகளிலும் 25c-40c வரை வெட்ப நிலையில் உள்ள எல்லா பகுதிகளிலும் நன்கு வளர்கிறது. இம்மரங்களை நீர்பாசன வசதியுள்ள நிலப்பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மற்றும் வரப்புகளிலும் வளர்க்கலாம். 

இம்மரம் வடிகால் வசதியுள்ள ஆழமான மண் வளமுள்ள வண்டல்மண், செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண்ணில் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர் வடியா நிலங்களும் இம்மர உற்பத்திக்கு உகந்ததல்ல.

பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் :

குமிழ் மரங்கள் நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்கத் தொடங்கினாலும் நன்கு பூக்க 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன் ஆகஸ்ட் மாதங்களில் பூக்கத் தொடங்கி ஏப்ரல்-ஜுன் மாதங்களில் விதைகள் முற்றி பழமாக கீழே விழ ஆரம்பிக்கும். 

பொதுவாக குமிழ் மரங்களில் நன்கு காய்பிடிக்கும். 15 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக 1 மரத்திற்கு 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 2000 குமிழ் விதைகள் இருக்கும்.

விதை சேகரம் :

விதைகளை நன்கு நேராக வளர்ந்து 15 வயதிற்கு மேற்பட்ட குமிழ் மரங்களிலிருந்து ஏப்ரல்-ஜுலை மாதங்களில் சேகரிக்கலாம் பழங்கள் முட்டை வடிவத்தில் இருக்கும். அவைகள் பழுத்து தானாகவே மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். 

பழங்களில் பழுப்பு நிற பழங்களை மட்டும் சேகரித்து 4-5 நாட்கள் வரை குவித்து வைத்து சதைப்பகுதியை நன்கு அழுக விட வேண்டும். அழுகிய கனிகளைப் பிசைந்து கொட்டைகளைக் கழுவி 2-3 நாட்கள் உலர வைக்க வேண்டும். மேலும் இவ்விதைகளில் தரமான விதைகளை மட்டும் பொறுக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விதையின் முளைப்புத் தன்மை இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். முளைப்பு திறன் சுமார் 50 சதவீதமாகும். விதையை 24 மணிநேரம் வரை நீரில் ஊற வைத்து விதைநேர்த்தி செய்து விதைப்பது நன்று. ஒரு கிலோ எடையில் சுமார் 2000 விதைகள் இருக்கும்.