பார்த்தீனியம் செடிகளை களை எடுப்பதும், கட்டுப்படுத்துவதும் அவசியம். ஏன்?
பார்த்தீனியம் செடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த களைச்செடி அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்வதால் விரைவாக பரவி எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
எல்லா பருவ காலங்களிலும் அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடிய செடியாகவும் இருப்பதால் அனைத்து இடங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த களைச்செடியால் மனிதர்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா, தோல் நோய்கள், சுவாசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுகின்றன.
இந்த செடியை உண்ணும் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் கூட மிக அதிகமான தீமைகளை விளைவிக்கிறது. எனவே பார்த்தீனியம் களைச் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
கட்டுப்படுத்துவது எப்படி?
1. செடிகளை பூ பூப்பதற்கு முன்பு கையுறை அணிந்து கொண்டு வேரோடு பிடுங்கி எரித்து விட வேண்டும். இதனால் இவை விதைகள் மூலம் பரவுவதை தடுக்கலாம்.
2. பார்த்தீனியம் செடி அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர்களான அடர் ஆவாரை, ஆவாரை, துத்தி, நாய்வேளை ஆகிய செடிகளை வளரச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
3. செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம்.
4. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது அட்ரசின் களைக் கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் 625 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நிலத்தில் சீராக தெளிக்க வேண்டும்.
5. சாலையோரங்கள் மற்றும் ரயில்பாதை ஓரங்களில் உள்ள களைகளை அகற்ற 1 லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு மற்றும் 2 மில்லி டீபால் ஒட்டு திரவத்தினை கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
6. சைக்கோ கிரம்மா பைக்கலரெட்டா என்ற வகை வண்டுகளை வளர்த்து அதை பார்த்தீனிய செடி வளரும் இடங்களில் விட்டு கட்டுப்படுத்தலாம்.