ஒருங்கிணைந்த பண்ணையில் நெல் - மீன் வளர்ப்பு முறை - அறுவடை வரை முழு அலசல்...
நெல் - மீன் வளர்ப்பு முறை
கடற்கரை ஒட்டிய டெல்டாப் பகுதிகளில் மழைக் காலங்களில் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை நெல் பயிர் செய்வர். ஏனெனில் மழைக்காலங்களில் மட்டுமே இப்பகுதியில் உப்பின் அளவு சற்று குறைவாக இருக்கும். மற்ற காலங்களில் அதிக உப்புத்தன்மையினால் பயிரேதும் பயிரிட முடியாமல் வயல்கள் வெற்று நிலமாக விடப்படும்.
அது போன்ற பகுதிகளில் காரிஃப் பருவத்தில் மரூரி, சடமோட்டா, கலோமோட்டா, தால்முகர், தாமோதர், தசல், கேட், ஜெயா, சத்னா, பன்கஜ், பட்னை - 23, லுனி, பொக்காளி, கட்டக்தன்டி, வைட்டிலா, பிலிகாகா, சி.எஸ்.ஆர் - 4, சி.எஸ்.ஆர் - 6, மட்லா, ஹேமில்ட்டன், பால்மன் 579, பி.கே.என், ஆர். பி - 6, எஃப். ஆர் 461, ஆர்யா போன்ற நெல் இரகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
நெல்லுடன் உவர்நீர் இறால் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் கடலோரப் பகுதிகளில் கோடை காலங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களிலிருந்து வருவாய் பெற இயலும்.
மேற்கு வங்கத்தில் நெல்வயலில் மீன் வளர்க்கும் இடங்களில் உப்புத்தன்மை குறைவதாகக் கூறுகின்றனர். கேரளாவின் போக்களிப் பகுதிகளில் கோடைகாலங்களில் உவர் நீர் மீன் வளர்ப்பை மேற்கொள்கின்றனர். இப்பகுதிகளில் கிடைக்கும்
மீன் உற்பத்தி அளவு 300 - 1000 கி.கி வரை வேறுபடுகிறது. இந்த உவர்நீர் மீன் வளர்ப்பு சிறந்த முறையில் பயன்தருவதோடு கூடுதல் வருமானத்தையும் விவசாயிகளுக்கு அளிக்கிறது. இம்முறையில் பெரிய வரி இறால், இந்திய வெள்ளை இறால், கடல் இறால், மெட்டாபீனஸ் மோனோசர்ஸ் போன்ற இனங்கள் வளர்க்கப் படுகின்றன.
தொழில்நுட்ப அளவைகள்
கடல் சார்ந்த பகுதிகள் மிகவும் தாழ்மட்டமாக கடல் மட்டத்திலிருந்து 8 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும். உப்பு நீருடன் கலப்பதால் மழைநீரும் அதிக நாள் நன்னீராக இருப்பதில்லை. இவ்விறால் வளர்ப்பிற்கு 1 மீ அலை வீச்சு இருக்கும் இடங்கள் இறால் வளர்ப்பிற்கு ஏற்றவை.
மண்ணின் தரம்
வண்டல் களிமண், அல்லது வண்டல் களிமண்பொறை போன்ற மண் வகைகள் மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு ஏற்றது.
நீர்
உவர் நீர் மீன் வளர்ப்பிற்குப் பின் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். ஏனெனில் நீரின் உப்புத் தன்மையைக் குறைக்க இம்மழைநீர் உதவும்.
குளத்தின் அமைப்பு
நெல் வயல்கள் உவர் நீர் மீன் வளர்ப்புக்கு ஏற்றவாறு கரைகள் மண் பூச்சு கொண்டு சற்று உயரமாக அமைக்கப்பட வேண்டும். கரையின் உயரம் அலைகள் எழும் உயரத்தையும், நில அமைப்பையும் பொறுத்து 50 - 100 செ.மீ வரை இருக்கலாம். ஒரு ஹெக்டர் நிலத்தில் இடையில் உள்ள கால்வாயின் அளவு 2 மீ அல்லது 1 மீ இருக்க வேண்டும். கால்வாயில் தோண்டப்படும் மண்ணை கரையை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி
வயலின் ஒரு புறத்தில் அலை வழியே நீர் புக ஏதுவாக மரத்தாலான உட்செலுத்தி அமைக்க வேண்டும். அலைகள் சற்று பெரிதாக வீசும் போது அதிக நீர் உட்புகும். இந்த உட்செலுத்தியின் வழியே பிற மீன்களோ, ஊனுண்ணிகளோ உள்ளே நுழையாதிருக்க வழிகாட்டியைப் பொறுத்த வேண்டும். இதே போல் வயலின் மறுபுறம் ஒரு வெளியேற்று குழாய் (வடிகால் வசதிக்காக) இருக்க வேண்டும். அதில் தேவையானபோது திறந்து மூடிக்கொள்ளுமாறு ஓர் அடைப்பு இருக்க வேண்டும்.
குளத்தின் பராமரிப்பு
வயலை ஒரு பருவத்திற்கு மட்டுமே குளமாகப் பயன்படுத்துகிறோம். நெல் அறுவடை முடிந்த உடன் நீரை வடித்துவிட்டு வயலை வெளியில் காய விட வேண்டும். அமிலத் தன்மையுடைய மண்ணாக இருப்பின் சுண்ணாம்பு இட வேண்டும். வயல் ஓரங்களில் பனை மரம், வைக்கோல் மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு நிழற் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணிக்கை
நெல் வயலைத் தயார் செய்த பின் பெரிய வரி இறால் அல்லது இந்திய வெள்ளை இறால் போன்ற மீன்களை ஒரு சதுர அடிக்கு 3 மீன்கள் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
உணவளித்தல்
இயற்கை உணவுகளை அளிப்பது சிறந்ததே என்றாலும் அது அதிக அளவில் கிடைக்க வாய்ப்பில்லாததாதும், தொடர்ந்து வைத்துப் பாதுகாக்க இயலாததாலும் மேலுணவு மட்டும் அளிக்கப் படுகிறது.
அறுவடைசெய்தல்
கைகளால் பிடித்தோ அல்லது குளத்து நீரை வடித்து விட்டோ மீன்கள் அனைத்தையும் அறுவடை செய்யலாம். சராசரி வளர்ப்பு நாட்கள் 100 - 120 நாட்கள். இதற்குள் இறால்கள் 35 கி எடை வரை வளர்ந்து இருக்கும். பிடிக்கப்பட்ட இறால்களை உடைக்கப்பட்ட ஐஸ் துண்டுகளடங்கிய பெட்டிக்குள் வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.