மழைக்குப் பின் வாழைப் பயிரில் “இலைப்புள்ளி நோய்” அதிகளவில் தாக்கும். இதனை கட்டுப்படுத்த அதிகம் பாதித்த இலைகளை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தி எரித்து அழிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இலைப்புள்ளி நோய் அடுத்த இலைக்கு பரவுவது தடுக்கப்படும்.

காற்றோட்டமான தோட்டங்களில் நோய் விரைந்து பரவாது. இந்த நோயின் தொடக்க அறிகுறிகள் இலைகளில் தென்பட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது இரண்டரை கிராம் காப்பர் மாங்கோசெப் அல்லது இரண்டு கிராம் குளரோதலோனில் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் தெளிக்க வேண்டும்.

பூச்சி மற்றும் பூசணக் கொல்லி மருந்துகள் பயிரின் மீது நன்கு பரவி படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இண்ட்ரான், பைட்டோவெட் ஆகியவற்றில் ஒன்றை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி என்ற அளவில் வாழைக்கு சேர்த்து கலக்கி கொள்வது அவசியம்.