செண்டு மல்லியின் ஆயுள்காலம் மூன்று மாதங்கள். பத்து முதல் பதினைந்து நாட்களான நாற்றுகள் நடலாம். 2×2 அடி பார் பிடித்து நடவு செய்வது சிறந்தது. இதில் பல வண்ணங்கள் இருந்தாலும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பிரபலமானவை.

ஒரு ஏக்கருக்கு 75 முதல் 100கிராம் விதை தேவைப்படும். மேட்டு பாத்தி அமைத்து நாற்று விடவேண்டும். நிழல் வலை அமைத்து பிளாஸ்டிக் ட் ரேக்களில் நாற்று விட்டால் சிறிது விதை குறைவாக தேவைப்படும். டிரேக்கள் மூலம் நடவு செய்தால் நாற்று சேதாரம் ஏற்படுவது கணிசமாக குறையும்.

15 வது நாள் நுனி கிள்ளி விடுவதால் அதிகப்படியான துளிர்கள் உருவாகும். அதிகமான கிளைகள் வருவதால் அதிகமான மொட்டுகள் மற்றும் பூக்கள் கிடைக்கும். நாற்பதாவது நாள் முதல் பூ பறிக்கலாம்.

செண்டு மல்லி ஒரு குறுகிய கால பயிர் ஆகையால் சத்துக்கள் அதிகம் தேவைப்படும். அதனால் அடி உரமாக மக்கிய தொழுஉரம் இட்டு பின் பார் பிடித்து நடவேண்டும். களை எடுக்கும்பொழுது செடிகளுக்கு மண் அனைத்தல் மிக முக்கியம். இல்லை என்றால் செடிகள் சாய்ந்து விடும்.

இதற்கு தண்ணீர் அதிகம் தேங்கக்கூடாது, அப்படி தண்ணீர் தேங்கினால் உடனே செடிகள் இறந்து விடும். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை கலந்து தண்ணீர் பாய்ச்சும் போது தொடர்ந்து வேரில் அளிப்பதன் மூலம் பெரிய மற்றும் வாளிப்பான பூக்கள் தோன்றும்.

கற்பூரகரைசல் வாரம் ஒரு முறை தொடந்து தெளித்தால் பூச்சி தாக்குதலை முற்றிலும் தடுக்கலாம். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலையும் தெளிக்கலாம். இதனால் பூச்சிகள் அறவே வராது.

செண்டு மல்லிக்கு சந்தையில் ஓரளவு நிலையான விலை உண்டு. சில சமயங்களில் விலை ஏற்ற இறக்கமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.