Asianet News TamilAsianet News Tamil

மல்லிகைப் பயிர்களை தாக்கும் பூச்சிகளை எப்படி கண்டறிந்து விரட்டுவது?

How to find Jasmine and ridding crops of pests that attack
how to-find-jasmine-and-ridding-crops-of-pests-that-att
Author
First Published Mar 29, 2017, 12:29 PM IST


மல்லிகைப் பயிர்களை தாக்கும் பூச்சிகள்:

பூப்பேன், மொட்டுப்புழு, மொட்டு ஈ, செஞ்சிலந்தி, வேர் அழுகல், இலைப்புள்ளி நோய், இரும்பு சத்து பற்றாக்குறை ஆகியவை மல்லிகைப் பயிர்களைப் பாதிக்கின்றன.

அறிகுறிகள்:

1.. மொட்டு ஈ: 

மல்லிகை பூ மொட்டுகள் குங்கும கலராக நிறமாற்றம் அடைந்து காய்ந்து உதிர்கின்றன.

2. மொட்டுப் புழு: 

மொட்டுகள் துளைக்கப்படும். ஒன்றோடு ஒன்று பிணைக்கப்படும். பாதிக்கப்பட்ட மொட்டுகள் மலராது உதிர்கின்றன.

3. பூ பேன்கள்: 

பூ மொட்டுகள் புழுப்பு நிறமடையும். காம்புகள் குறுகும். பூக்கள் மலர மறுக்கும். தொடர்ச்சியான வறண்ட சூழ்நிலையில் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும்.

தீர்வு:

மொட்டு ஈ, மொட்டுப்புழு, பூப்பேன்கள்: ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி மானோகுரோட்டோபாஸ் மருந்தினை கால் மில்லி திரவ சோப் சேர்த்து தெளிக்க வேண்டும்.

4. செஞ்சிலந்தி: 

வெண் மஞ்சள் பகுதிகள் தோன்றி இலைகள் வெளுத்துக் காய்ந்து உதிரும். முதிர்ந்த இலைகளில் தாக்குதல் துவங்கி பின்னர் துளிர் இலைகள் மற்றும் நுனித்தண்டு பாதிக்கப்படும். பூக்கள் உற்பத்தி குறையும்.

பாதித்த பகுதிகளை உற்றுநோக்கினால் நூலாம்படையும் அதனுள் சிவந்த நிற சிறு பூச்சிகள் மெதுவாக நகர்வதையும் காண இயலும். வெப்பமான, மழையற்ற வறண்ட சூழ்நிலை செஞ்சிலந்தி தாக்குதலை அதிகரிக்கும்.

தீர்வு:

நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதம் அல்லது டைக்கோபால் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி வீதம்) ஏதேனும் ஒன்றினை மட்டும் தெளிக்க வேண்டும். பதினைந்து நாட்கள் கழித்து தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

 

5. வேர் அழுகல் (அ) வாடல் நோய்: 

கீழ்மட்ட இலைகள் மஞ்சள் நிறமடையும். நுனியிலைகள் வாடி வதங்கும். வேர்ப்பகுதிகள் கருமை நிறமாகும். செடி முழுவதும் காய்ந்துவிடும். காய்ந்த வேர்ப்பகுதிகளில் வெள்ளி நூல் போன்ற பூசண இலைகளும் கடுகு போன்ற பூசண உருண்டைகளும் காணப்படும்.

தீர்வு:

நோய் அடுத்த செடிகளுக்குப் பரவுவதைத் தடுக்க நோயுற்ற செடிக்குப் பாய்ந்த தண்ணீர் அடுத்த செடிக்குப் போகாமல் தனித்தனியாகப் பாய்ச்சவும். கார்பன்டசிம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தூரில் ஊற்ற வேண்டும்.

6. இலைப்புள்ளி நோய்கள் (அ) செர்க்கோஸ் போரா புள்ளி: 

சிறிய சாம்பல் நிறப்புள்ளி பழுப்பு நிறச் சுற்றுப்புறத்துடன் காணப்படும். புள்ளிப்பகுதி உதிர்ந்து துளையாகிவிடும்.

7.. ஆல்டர்நேரியா இலைப்புள்ளி: 

புள்ளிகள் இலைநுனியில் துவங்கி இலைக்காம்பு வரை பரவும். புள்ளிகள் ஒழுங்கற்று கருப்பு நிறமாகும். புள்ளிகள் துளையாகிவிடும். குறைந்த வெப்பம், காற்றில் அதிக ஈரப்பதம் ஆகிய சூழ்நிலைகளில் இந்நோய் விரைந்து பரவும்.

தீர்வு:

இலைப்புள்ளி நோய்கள்: மாங்கோசெப் (டைத்தேன்) மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து முன்னர் குறிப்பிட்டபடி திரவ சோப்பு சேர்த்து தெளிக்க வேண்டும்.

8. இரும்புசத்துப் பற்றாக்குறை:

முதலில் நுனியிலைகளில் துவங்கி பின்னர் மற்ற இலைகளில் நரம்பிடைப்பகுதி மஞ்சள் நிறமடையும். பின்னர் இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமடையும். பூக்கள் எண்ணிக்கை குறையும். நுனித்தண்டுகள் காயும். செடியின் வளர்ச்சி குன்றும்.

தீர்வு:

இரும்பு சல்பேட் (அன்னபேதி) 0.05 சதக்கரைசல் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து கிராம் வீதம்) தெளித்து கட்டுப்படுத்தலாம். கவாத்துசெய்து உரமிடும்போது நன்கு மக்கிய தொழு உரம் தூருக்கு பத்து கிலோ என்ற அளவில் இடுவது நல்லது. 

Follow Us:
Download App:
  • android
  • ios