மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பழம். ஒவ்வொருவர் வீட்டிலும் தவறாமல் வளர்க்க வேண்டிய செடிகளில் ஒன்று.

விவசாயிகளுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடிய பணப்பயிர். அணைத்து காலங்களிலும் நல்ல விலை கிடைக்கும் பணப்பயிர். 

ஒட்டு கன்றுகள் முறையில் நடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை சாகுபடி செய்ய ஆடிப்பட்டம் சிறந்தது ஆகும். ஆடியில் பயிரிடுவதால் நன்கு வறட்சியை தாங்கி வளரும்.

எலுமிச்சையில் அதிக ரகங்கள் நடைமுறையில் இருந்தாலும். திருப்பதி வேளாண்மை பல்கலைக்கழக வெளியீடான பாலாஜி, மற்றும் திரு. புளியங்குடி அந்தோணி சாமி அவர்களால் வெளியிடப்பட்ட ரகமும் தற்போது அதிகமாக சாகுபடி க்கு பயன்படுத்த படுகின்றன.

எலுமிச்சை நடவு செய்யும்பொழுது கடைபிடிக்க வேண்டியவை:

எலுமிச்சை நடவு செய்யும் பொழுது 15×15 அல்லது 20×20 அடி என்ற அளவில் இடைவெளி விட்டு நடுவது சிறந்தது.

1.5 × 1.5 அடி அளவுள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும். குழிகளின் அடியில் சிறிது சுண்ணாம்பு தூள் தூவி, மண்புழு உரத்துடன் மீன் அமிலம் கலந்து குழியில் இட்டு நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், சுண்ணாம்பு தூள் வேர் கரையான் தாக்காமல் கட்டுப்படுத்தும்.

சில கன்றுகள் நட்ட ஆறாம் மாதமே பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். ஆனால் இரண்டாவது வருடம் முடிவில் பூக்கள் பிஞ்சுகள் ஆவது செடிகளுக்கு ஆரோக்கியம். காய்ந்த கிளைகளை கவாத்து செய்து விடவேண்டும்.

பொதுவாக எலுமிச்சை வருடத்தில் இரண்டு முறை காய்க்கும். சிலரகங்கள் வருடம் முழுவதும் காய்க்கும்.

எலுமிச்சையில் நுன்னூட்ட சத்து பற்றாக்குறை அதிகமாக காணப்படும். இலைகள் வெலுத்து மஞ்சள் நிறமாக மாறும். இதனை தடுக்க மாதம் ஒரு முறை நுன்னூட்டம் செடிகளுக்கு அளிக்க வேண்டும்.

இயற்கை கரைசல்களான பஞ்சகவ்யா, அமிர்த கரைசல் போன்றவற்றை தொடர்ந்து செடிகளுக்கு கொடுப்பதன் மூலம் வளமான அடர்த்தியான செடிகள் வளரும். இதனால் அதிக பூக்கள் மற்றும் காய்கள் கிடைக்கும்.

கற்பூரகரைசல் தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சிகள் தொல்லை வராது, வேரிலும் ஊற்றலாம். நூற்புழு தாக்குதல் முழுமையாக கட்டுப்படும். மீன் அமிலத்தை தெளிப்பு மூலமும் மற்றும் வேர் வழியாகவும் கொடுக்கலாம்.

மண்புழு உரம் எலுமிச்சைக்கு இன்றியமையாதது. பதினைந்து நாட்கள் ஒருமுறை வேரில் தொடர்ந்து கொடுக்க வேண்டும். இதனால் செடிகள் நல்ல செழிப்புடன் காணப்படும்.

சில காய்க்காத மரங்கள் திடீரென்று அதிக பூக்கள் மற்றும் காய்கள் அளவிற்கு அதிகமாக தோன்றும் ஆனால் மரம் இறந்து விடும். இதற்கு காரணம் வேர் புழு தாக்குதல். மேற்சொன்ன கரைசல்கள் தெளிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.