பயோ டீசல் தயாரிக்க உதவும் காட்டாமணக்கு சாகுபடி தொழில்நுட்பம் இதோ...
காட்டாமணக்கு சாகுபடி தொழில்நுட்பம்
** நம் நாட்டில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல், டீஸல் விலை காரணமாக மாற்று எரிபொருளாக பயன்படும் பயோ டீசலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
** பயோ டீசல் காட்டாமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதவீத திரவ எரிபொருளும், 70 சதவீத புண்ணாக்கும் கிடைக்கிறது. இந்த திரவ எரிபொருளை சுத்தப்படுத்தி டீஸலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன்படுத்தலாம்.
** தமிழ்நாடு பல்கலையில் தேர்வு செய்யப்பட்ட “ஜெட்ரோபா கார்கஸ்” என்ற ரகமே உயர் விளைச்சலை தரக்கூடியது. இப்பயிர் சாகுபடி செய்ய ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஏற்றவை. இது களர், உவர் இல்லாத அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது.
** விதைகளை பசுஞ்சாண கரைசலில் 12 மணி நேரம் ஊறவைத்து பின், கோணிப்பையில் 12 மணி நேரம் முடிவைக்க வேண்டும். அவற்றை பாலீதீன் பைகளில் போட்டு, விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.
** 60 நாட்களில் நாற்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.நடவுக்கு முன், சட்டிக்கலப்பையில் ஒரு முறையும், கொத்துக் கலப்பையில் ஒரு முறையும் நன்கு நிலத்தை உழவு செய்ய வேண்டும். பின், 2 க்கு 2 மீட்டர் இடைவெளியில் ஒரு அடி ஆழம்- அகலம், நீளம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும்.
** நடவுக்கு முன் ஒரு குழிக்கு மட்கிய எரு இட வேண்டும். அந்தக் குழிகளில் 50 கிராம் தொழு உரம், 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு கலந்த மண்ணை இட்டு நாற்றுக்களை நட வேண்டும்.
** செடிகளை நட்டபின், 3ம் நாள் நீர்பாய்ச்ச வேண்டும். செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் வளரும் நுனியை கிள்ளிவிட வண்டும். பக்கவாட்டில் வரும் கிளைகளின் நுனிகளையும் இரண்டாம் ஆண்டு இறுதிவரை கிள்ளிவிட வேண்டும். 25 பக்க கிளைகள் உள்ளவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். செடிகள் ஆறு மாதங்களில் பூக்க ஆரம்பித்துவிடும்.
** முதல் இரண்டு ஆண்டுகளில் செடிகளில் வரிசையின் இடையே தக்காளி, உளுந்து, பாகல், பூசணி, பரங்கி, வெள்ளரி ஆகியவற்றை ஊடு பயிராக பயிர் செய்யலாம். தரிசாக இருக்கும் நிலங்களிலும் வரப்பு ஓரங்களிலும் காட்டாமணக்கு சாகுபடி செய்து பயன்பெறலாம்.
** காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகவும், பின் காய்ந்து கருப்பு நிறமாகவும் மாறிவிடும். ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டதால், காய்களை மாதம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.
** பல்லாண்டு காலப்பயிர் 30 ஆண்டுகளுக்கு மகசூல் தரவல்லது. எனவே விவசாயிகள் காட்டாமணக்கு பயிரிட முன்வரவேண்டும்.