குமிழ் மர சாகுபடியில் நாற்றங்கால் :

10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தி அமைக்க வேண்டும். கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாய்பாத்தியின் மீது வேம்பு பால் கரைசலை நன்றாக தெளிக்க வேண்டும். 

ஒரு அங்குல கனத்தில் குறு மணலை தாய்பாத்தியின் மீது பரப்ப வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட குமிழ் விதைகளை ஒரு தாய்பாத்திக்கு 5 கிலோவீதம் விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விதைக்க வேண்டும். 

குமிழ்விதையின் கனத்திற்கு சலித்த செம்மண் மற்றும் மணல் கலந்த கலவையை தாய்பாத்தியின் மீது தூவி விடவேண்டும். அதன் பின்பு தாய்பாத்தியின் மீது வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி விடவேண்டும்.

தாய்பாத்தியின் மீது 15 நாட்களுக்கு பூவாளி  மூலம் காலை மாலை இரு வேளை நீர்ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு பூவாளி மூலம் தினமும் ஒரு வேளை நீர் ஊற்ற வேண்டும். குமிழ்விதைகள் 10-12 நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். இந்நிலையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றுகளை தாய்பாத்தியிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.

செம்மண், வண்டல் மண், மணல் மற்று நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியாக சல்லடையில் சலித்து நன்றாக கலந்துவிட வேண்டும். அதனோடு 1 பாலித்தீன் பைக்கு (13X25) செ.மீ அல்லது (16X30) செ.மீ. அளவு பாலீத்தின் பைகள்) 6 கிராம் அசோஸ்பைரில்லம், 6 கிராம் பாஸ்போ பேக்டீரியம், 15 கிராம் வேம் மற்றும் 35 கிராம் அளவிற்கு மண்புழு உரத்தை நன்கு கலந்துவிடவேண்டும். 

இம்மண் கலவையை (13X25) செ.மீ. அளவுள்ள பாலீத்தின் பைகள் அல்லது (13X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். நாற்றங்காலில் கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு பாலை நன்கு தெளிக்க வேண்டும்.

மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளை 10மீX1மீ அளவுள்ள நிலையான பாத்திகளில் அடுக்கி வைக்க வேண்டும். தாய்பாத்தியில் குமிழ் நாற்றுகள் முளைத்து நான்கு இலைகள் வந்ததும் அவைகளை வேர்கள் சேதாரம் இல்லாமல் எடுத்து ஒவ்வொரு பாலித்தீன் பைக்கும் ஒரு செடிவீதம் நடவு செய்ய வேண்டும். 

தாய்பாத்தியில் முளைத்த தரமான இளங்கன்றுகளை மட்டும் எடுத்து பாலித்தீன் பைகளில் நடவு செய்தல் வேண்டும். பின்பு பாலித்தீன் பைகளில் நடவு செய்யப்பட்ட குமிழ்கன்றுகளுக்கு 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு தினமும் ஒரு வேளை பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். 

பின்பு 60 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூவாளியால் நீர் ஊற்ற வேண்டும். இதன் பின்பு வாரத்திற்கு இருநாள் நீர் ஊற்றுவது போதுமானது. மழைபெய்யும் நாட்களில் நாற்றுகளுக்கு நீர் விடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.