1. கூட்டு மீன் வளர்ப்பிற்கு பெருங்கெண்டை மீன் இனங்களே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏன்?

ஏனெனில் பெருங்கெண்டை மீன் இனங்கள் தாவர உணவுகளையும், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களையும் உண்ணுகின்றன. எனவே உற்பத்தி செய்வது எளிது. மேலும் இவை விரைவில் வளர்ந்து பெரிய அளவை அடைந்துவிடுகின்றன.

2. கெண்டை மீனில் எத்தனை வகைகள் உள்ளன?

கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை  இந்தியப் பெருங்கெண்டை இனங்கள். வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, மற்றும் சாதாரண கெண்டை போன்றவை அயல்நாட்டு கெண்டைகள். இவற்றில் இந்திய கட்லா இனம் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.

3. மீன்குளம் அமைப்பது பற்றிக் கூறவும்?
 
ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். 

குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

4. குளங்களை ஏன் காயவைக்க வேண்டும்?

இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. 

குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

5. ஒரு எக்டர்க்கு எத்தனை மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம்?

ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது.