ஒரு நீர் நிலையில் வெளியிலிருந்து இடுபொருட்கள் இடாத நிலையிலும் அங்கு மீன்களுக்கு உணவாகப் பயன்படக்கூடிய பல வகையான பொருட்கள் உற்பத்தியாகின்றன. 

இவை மாறுபட்ட தன்மைகளைக் கொண்டதோடு குளத்தின் பலவேறு மட்டங்களிலும், நிலைகளிலும் உருவாகின்றன. குளத்தின் அடிமட்ட மண்ணில் சேரும் அங்ககக் கழிவுகள் இதற்கு அடிப்படை ஆதாரமாக உள்ளன. 

குளத்தடி மண்ணிலுள்ள அங்ககக் கழிவுகளை பாக்டீரியா நுண்ணுயிர்கள் சிதைப்பதால் அக்கழிவுகளிலிருந்து உரச்சத்துக்கள் வெளியாகி நீரில் கரைக்கின்றன. கரைந்த உரச்சத்துக்களைப் பயன்படுத்தி பல வகையான தாவர இனங்கள் நீரில் உருவாகிப் பெருகுகின்றன. 

இவற்றுள் தாவர நுண்ணுயிர் மிதவைகள், நுண் தாவரங்கள் மற்றும் பல விதமான நீர்த்தாவரங்கள் அடங்கும். இவ்வாறு நீரில் உருவாகும் தாவரங்கள் முதல் நிலை இயற்கை உணவாக விளங்குகின்றன. 

அதன் பின்னர் இத்தாவரங்களை உணவாகப் பயன்படுத்தும் சிறு விலங்கு இனங்கள் உற்பத்தியாகிப் பெருகுகின்றன. இவ்வகை உயிரினங்கள் இறந்தபின் அடிமட்டத்தில் கழிவுகளாக சேர்கின்றன. 

அங்கு அவற்றைப் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிர்களும் பல வகை புழு இனங்களும் உற்பத்தியாகின்றன. இது தவிர நீரில் வளரும் தாவரங்கள் மீதும் பிற திடப்பொருட்கள் மீது பலவகை ஒட்டி வளரும் உயிரினங்கள் சேர்ந்து பெருகுகின்றன. 

இவ்வாறு ஒரு இயல்பான குளத்தில் மீன்களுக்கு உணவாகப் பயன்படும் பல வகையான இயற்கை உணவுகள் உருவாகி நீரில் பல்வேறு மட்டங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றுள் தாவர வகை உணவுகளே அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

மீன் வளர்ப்பிற்குப் பரிந்துரைக்கப்படும் பல வகையான பெருங்கெண்டை இனங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட உணவுப் பழக்கம் கொண்டவை. எனவே குளங்களில் ஒரு பெருங்கெண்டை இனத்தை மட்டும் தனி இனமாக வளர்க்கும் போது அந்த இனம் அதன் தன்மைக்கேற்ற இயற்கை உணவை மட்டுமே பெருமளவில் பயன்படுத்தும். \

இந்நிலையில் நீரில் உற்பத்தியாகும் பிற இயற்கை உணவு வகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கழிவுகளாகவே போகும். 

இந்நிலையைத் தவிர்க்க நீரில் இயல்பாகவே உருவாகும் மாறுபட்ட தன்மை கொண்ட பல வகை இயற்கை உணவுக்காக ஒரே இடத்திற்குச் சென்று போட்டியிடாமல் நீர்மட்டத்தில் அவற்றிற்கான இயற்கை உணவு கிடைக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றின் உணவுத் தேவையை பூர்த்திச் செய்கின்றன. 

இதனால் அவற்றினிடையே உணவிற்காகவோ இடத்திற்காகவோ போட்டிக்ள ஏற்படுவதில்லை. இதுவே கூட்டு மீன் வளர்ப்பின் அடிப்படைத் தத்துவமாகும். எனவே இம்முறையில் நீரில் பல நிலைகளிலும் உருவாகும் அனைத்து வகையான இயற்கை உணவு வகைகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால் அதிக மீன் உற்பத்தி கிடைக்கிறது. 

ஆக கூட்டு மீன் வளர்ப்பில் குளங்களில் இயற்கையாக உருவாகும் பல வகை இயற்கை உணவு வகைகளை உண்டு வளரும் மாறுபட்ட உணவுப் பழக்கங்களைக் கொண்ட வேக வளர்ச்சி பெருங்கெண்டை மீன் இனங்களை விகிதாச்சார அடிப்படையில் இருப்புச் செய்து வளர்க்கின்றோம். 

கூட்டு மீன் வளர்ப்புமுறை இயற்கையில் உருவாகும் பலவகை உணவுகளை முழுமையாக பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இருந்தாலும் நடைமுறையில் இம்முறையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நாம் மேலுணவும் அளிக்கிறோம். இதனால் மீன்களின் வளர்ச்சி அதிகரித்து அதிக உற்பத்தியும், வருவாயும் கிடைக்கிறது.