1..  தோட்டக்கலை - மீன் வளர்ப்பு முறை

குளத்தைச் சுற்றியுள்ள கரைகளில் தோட்டப் பயிர்களை வளர்க்கலாம். குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு மட்டுமின்றி பயிர்களின் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குளத்தினடியில் தேங்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சிறந்த உரமாகப்பயன்படுகிறது. 

காய்கறி மற்றும் பழவகைப் பயிர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இம்முறைக்கு ஏற்றவாறு, குட்டையான, அதிக நிழல் தராத, எப்போதும் பசுமையான, பருவநிலை சார்ந்த, வருமானம் தரக்கூடிய பயிர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

குட்டை பழவகை மரங்களான மா, வாழை, பப்பாளி, தென்னை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்கலாம். அதோடு ஊடு பயிர்களாக இஞ்சி, மஞ்சள், மிளகாய், அன்னாசி போன்ற பயிர்களை வளர்க்கலாம். மேலும் பூப்பயிர்களான ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செண்டு மல்லி, கிலாடியோலஸ் மற்றும் சாமந்தி போன்றவையும் அதிக வருவாயை ஈட்டித்தரும்.

காய்கறிக் கழிவுகளை குளத்தினுள் போட்டுவிடலாம். புல்கெண்டை போன்ற வகை மீன்கள் காய்கறிகளை நன்கு உண்ணும் இவற்றை ஹெக்டருக்கு 1000 மீன்கள் என்ற அளவில் வளர்க்கலாம். 

சாதாரண கெண்டை இன மீன்கள் குளத்தின் அழுகிய கழிவுகளை உண்ணும். கலப்பின மீன்களில் ரோகு, கட்லா, மிர்கல், புல்கெண்டை வகை மீன்களை முறையே 50:15:20:15 என்ற விகிதத்தில் வளர்க்க வேண்டும். 5000 மீன்கள் வரை ஒரு ஹெக்டரில் வளர்க்கலாம்.

2.. போக்களி நிலங்களில் மீன் வளர்ப்பு முறை:

கேரள மாநிலத்தில் போக்களி நெல் (நிலங்களில்) வயல்களில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு சுழற்சி முறையில் செய்யப்படுகிறது. இவ்வயல்கள் வெம்பன் நீரால் பாசனம் பெறுகிறது. நீர்ப்பாசனம் அலைகள் மூலம் செயல்படுகிறது. 

பயிரற்ற காலங்களில் மீன் மற்றும் இறால் வளர்க்கப்படுகின்றன. தென்மேற்குப் பருவ மழையால் பயன்பெறும் காலங்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின் நிலமானது மீன் வளர்ப்புக்காக விடப்படுகிறது. 

அலைகளின் மூலம் மீன் / இறால்கள் வயல்களில் சேகரிக்கப்படுகிறது. மீன்கள் வளர்ந்து, அறுவடை செய்யும் வரை முறையாகப் பராமரிக்க வேண்டும். நெற்பயிரின் மீதக் கழிவுகள் அழுகி நீரில் இருப்பதால் மீன்களுக்குத் தேவையான அளவு மிதவை உயிரிகள் மற்றும் உணவுத் தாவரங்கள் கிடைக்கின்றன. 

நீரை வடித்து மீன்களை அறுவடை செய்தபின் மீண்டும் நாற்று நட்டு விடுவர். நல்ல மழை பெய்தால் நீரின் உப்புத் தன்மை குறைந்து விடும்.