1.. தேங்காய் பிண்ணாக்கு

இதில் புரதம் சற்றுக் குறைவே. மேலும் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது பெருமளவில் கலப்புத் தீவனம் உற்பத்தி செய்வோருக்கு நேரடியாக எண்ணெய் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றது. எங்கும் தாராளமாகக் கிடைப்பதில்லை.

2.. சோயா பிண்ணாக்கு

தற்போது சோயா மொச்சை நம் நாட்டில் பயிரிடத் தொடங்கியுள்ள நிலையில் சோயா பிண்ணாக்கும், ஓரளவு கால்நடைத் தீவனமாகக் கிடைக்கின்றது. இது கடலைப் பிண்ணாக்கைப் போலச் சத்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், நச்சுப் பூஞ்சக் காளானால் இது பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இது உயர்ந்ததாகும்.

3.. பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு

முன்பு பருத்திக் கொட்டை பெருமளவில் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கிடைத்து வந்தது. மனிதத் தேவைக்கு எண்ணெய் கிடைக்காத சூழ்நிலையும், பலவகை எண்ணெய்களை வாசனையற்றுச் சுத்திகரிக்கும் சூழ்நிலையும், பருத்திக் கொட்டையை எண்ணெய் வித்தாக மாற்றி விட்டது. இப்போது பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு கிடைக்கின்றது. இதுவும் சிறந்த வெள்ளாட்டுத் தீவனமே. இதில் பைபாஸ் புரதம் (BY PASS PROTEIN) அதிகம் உள்ளது.

4.. அரிசித் தவிடு

இது சிறந்த வெள்ளாட்டுத் தீவனம் உமி கலவாமல், நன்கு சலித்துத் தீவனமாக அளிக்க வேண்டும். தற்போது வீடுகளில் கிடைக்கும் நெல் தவிர ஆலைகளிலிருந்து நெல் தவிடு வெள்ளாட்டுத் தீவனமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் சூழ்நிலையிலும், உமி கலந்ததாகவே உள்ளது. 

இப்போது நெல் தவிட்டிலிருந்து பெருமளவில் எண்ணெய் எடுப்பதால் எண்ணெய் நீக்கிய தவிடு, கலப்பினத் தீவனம் தயாரிப்போருக்குக் கிடைக்கின்றது. தவிட்டில் உள்ள உமி, வெள்ளாட்டுக் குடலில் அழற்சியை உண்டு பண்ணும்.

5.. கோதுமை தவிடு

இது சிறந்த தீவனமாகும். இது அதிக விலையில் விற்றாலும் எங்கும் கிடைக்கின்றது. இதனைப் பண்ணையாளர்கள் கலப்புத் தீவனம் தயாரிக்க நன்கு பயன்படுத்தலாம்.