நன்னீர் மீன் வளர்ப்பு முறை 

நமது நாட்டில் மீன்வளர்ப்பு மூலம் தற்போது பெறும் மீன் உற்பத்தி 2.5 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு நன்னீர் மீன்வளர்ப்பு மூலமே பெறப்படுகிறது. எனவே இந்திய துணைக்கண்டத்தில் மொத்த மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்வளர்ப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

நமது நாட்டில் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு பல மீன் இனங்கள் ஏற்றவையாக கருதப்படுகின்றன. இவற்றுள் கெண்டை, விரால், கெளுத்தி மற்றும் நன்னீர் இறால் இனங்கள் போன்றவை முக்கியமானவை ஆகும். 

இருப்பினும் பலவேறு காரணங்களால் நன்னீர் மீன்வளர்ப்பு மூலம் பெறும் உற்பத்தியில் 85 விழுக்காட்டிற்கும் அதிகமான உற்பத்தி கெண்டை மீன்கள் மூலமே பெறப்படுகிறது. 

பிற வளர்ப்பு இனங்களின் குஞ்சுகள் வர்த்தக ரீதியில் தேவையான அளவிற்கு உற்பத்தி செய்யப்படாத நிலையும், அவற்றின் வளர்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள் சரிவர பரப்பப்படாமல் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

கெண்டை மீன் வளர்ப்பில் மூன்று உள்நாட்டு பெருங்கெண்டை இனங்களும், மூன்று வெளிநாட்டு பெருங்கெண்டை மீன் இனங்களும் வளர்ப்பிற்கேற்ற இனங்களாகக் கருதப்படுகின்றன. 

இருப்பினும் நமது நாட்டில் பெருங்கெண்டை இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் போன்ற இனங்களே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.