1.. எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலைக்கு சமமாக சாகுபடி செய்யப்படும் பயிர் சூரியகாந்தி. சூரியனை நோக்கியே இந்த மலர் இருப்பதால் இதற்கு சூரியகாந்தி என்று பெயர்.

2.. மஞ்சள் நிறமாக இருக்கும். ஐந்து அடி உயரம் கூட வளரும் இது ஒரு வெப்ப மண்டல பயிர்.

3.. சூரியகாந்தியின் வயது 80 முதல் 90 நாட்கள். சில நேரங்களில் அறுவடை முடிய நூறு நாட்கள் கூட ஆகிடும்.

4.. சூரியகாந்தியில் விதை ஏக்கருக்கு 5 முதல் 7 கிலோ வரை தேவைப்படும். கோவை வேளாண் ஆராய்ச்சி நிலய ரகங்கள் மற்றும் சில தனியார் ரகங்கள் பிரபலமானவை.

5.. சூரியகாந்தி நடவு செய்ய இடைவெளி வரிசைக்கு வரிசை 1.5 அடி மற்றும் செடிக்கு செடி முக்கால் அடி இருக்குமாறு நடவு செய்யவேண்டும். பார்கள் ஓரங்களில் விதை நடப்பட்டு பின்னர் தண்ணீர் பாய்சவேண்டும். ஏழாம் நாள் முளைத்து வெளிவரும். நாற்பது நாள் முதல் மொட்டுகள் தோன்றும்.

6.. பூக்களில் மகரந்தம் ஆரம்பிக்கும் போது காலை அல்லது மாலை வேளையில் ஒன்றுடன் ஒன்று லேசாக நாம் உரசி விடுவதால் மகரந்தசேர்க்கை ஏற்பட்டு நல்ல விதைகள் உருவாகும். மகரந்தசேர்க்கை வண்டுகள் மற்றும் தேனீக்கள் மூலமாகவும் இப்பயிரில் ஏற்படுகிறது.

7.. சூரியகாந்திக்கு இரண்டு களைகள் வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படும். இரண்டாவது களை எடுக்கும் போது செடிகளுக்கு மண் அனைக்க வேண்டும். அப்போது தான் செடிகள் சாய்ந்துவிடாமல் இருக்கும்.

8.. சூரியகாந்தி பயிருக்கு சத்துக்கள் அதிகமாக தேவைபடுகிறது. மற்ற எண்ணெய் வித்து பயிர்களை காட்டிலும் நைட்ரஜன் சத்து சற்று கூடுதலாக தேவைப்படுகிறது. ஏனெனில் பூக்களின் அளவு பெரிதாக இருந்தால் தான் மகசூல் கூடும்.

9.. நுன்னூட்ட சத்துக்கள் அதிகம் தேவைப்படும், மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும் போதும் பாசன நீரில் கலந்து விட்டால் திரட்சியான பூக்கள் , அதிக எடை உடைய விதைகள் கிடைக்கும்.

10.. பூக்கள் மலரும் சமயத்தில் ஒரு ஏக்கருக்கு குறைந்தது ஐந்து தேனீ பெட்டிகள் வைப்பதன் மூலம் பதினைந்து சதவீத மகசூலை பெருக்கலாம்.

11.. சூரியகாந்தியை அதிகமாக தாக்குவது பச்சை புழுக்கள். விதைகள் நன்கு பிடிக்கும்போது இவை முற்றிலும் கடித்து உண்டுவிடும் இதனால் 60% வரை மகசூல் இழப்பு ஏற்படும். நட்ட பதினைந்து நாள் முதல் பத்து நாள் இடைவெளியில் தொடர்ந்து கற்பூரகரைசல் தெளித்தால் பச்சை புழுக்கள் வராமல் முற்றிலும் தடுக்கலாம்.

12.. கிளிகளின் தொல்லை பூக்கள் முற்றும் நேரத்தில் அதிகமாக இருக்கும். ஒளி பிரதிபலிக்கும் நாடாக்களை வயலில் ஆங்காங்கே கட்டிவைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

13.. பூங்கதிர்கள் நன்கு முற்றியவுடன்,  விதைகள் முழுவதும் கருப்பு நிறத்திற்கு மாறிய உடன் அறுவடை செய்து குவியலாக சேர்ந்து வைத்து பின் மூன்றாவது நாள் இயந்திரத்தில் இட்டு விதைகளை தனியாக பிரித்து வெயிலில் நன்கு காயவைத்து சாக்குகளில் சேமிக்கலாம்.