ஒருங்கிணைந்த பண்ணையில் வாத்து - மீன் வளர்ப்பு முறை கூட இருக்கு...
வாத்து - மீன் வளர்ப்பு
சீனா, ஹாங்கேரி, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் வாத்துடன் மீன் வளர்க்கும் முறை முக்கியமான ஒன்றாகும். மீன் வளர்க்கும் குளமானது குறிப்பிட்ட நீர்த் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கொண்ட பாதுகாப்பான இடம். ஆதலால் வாத்துகளுக்கு எந்த வித நோயத்தொற்று பயமும் இருப்பதில்லை.
அதற்குக் கைமாறாக வாத்துகள் மீன்களுக்கு ஊடுவிளைவிக்கும் தவளையின் குஞ்சுகள், தலைப்பிரட்டை, தட்டான் போன்றவற்றை உண்டுவிடுகிறது. மேலும் வாத்து கழிவுகள் நேராக குளத்தினுள் விழச்செய்யப்படுகின்றன. இது மீன்களுக்கு உணவாகிறது. மேலும் இதில் இரு நன்மைகள் அடங்கி உள்ளன.
** உரமளிக்கும் செலவு குறைவு
** ஆட்கூலி மிச்சப்படுத்தப்படுகிறது
இம்முறை இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீஹார், ஒரிசா, திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இதற்கென ‘இந்திய ஓடும் வாத்து’ இனங்கள் வளர்க்கப்படுகிறது. வாத்துகளின் கழிவில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளதால் வாத்துகள் ‘நடமாடும் உர இயந்திரங்கள்’ எனப்படுகிறது.
இம்முறையில் மீன் மற்றும் வாத்துகளுக்குத் தேவையான விலங்குப் புரதம் தேவையான அளவு கிடைக்கிறது. வாத்துகளின் கழிவில் 25 விழுக்காடு அங்ககப்பொருட்களும் 20 விழுக்காடு அனங்ககப் பொருட்களும் கார்பன், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன், கால்சியம் போன்ற சத்துக்களும் மிகுந்துள்ளன.
வாத்துக்களுக்கு நீரின் மேலே கொட்டகை அமைத்தோ அல்லது அவற்றை நீரிலேயே சுதந்திரமாக திரிய விட்டோ வளர்க்கலாம். மிதக்கும் கொட்டில் மூங்கில் ஆல் ஆனதாகவோ சிறு இடைவெளியுடன் வாத்து கழிவுகள் நீரினுள் விழுமாறு அமைக்கப்பட வேண்டும். 1 மீ2 இடத்தினுள் 15 - 20 வாத்துகள் இருக்குமாறு செய்யலாம்.
கொட்டிலில் அடைப்பதை விட திறந்த வெளி முறையே சிறந்தது. வாத்துக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த வாத்துகளை விற்றுவிட்டுப் புதிய குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். 100 - 3000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வாத்துக்களைப் பராமரிக்கலாம்.
வாத்துகளுடன் வளர்ப்பதற்கு 10 செ.மீ அளவிற்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் வாத்துகள் மீன் குஞ்சுகளை விழுங்கிவிடக்கூடும் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையும் வாத்து எண்ணிக்கைக்கும் குளத்தின் அளவிற்கும் ஏற்றவாறு அமையும்.
நைட்ரஜன் மிகுந்துள்ள வாத்துக் கழிவுகள் நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு வளர்ச்சியை அதிகரிக்கும். இவற்றை விரும்பி உண்ணும். வெள்ளி கெண்டை, கட்லா, சாதாரண கெண்டை போன்ற மீன் வகைகள் இம்முறைக்கு ஏற்றவை.
ஒரு ஹெக்டரில் 20000 விரலளவு மீன் குஞ்சுகளை விட்டால் ஓராண்டு இறுதியில் 3000 - 4000 கி.கி மீன்களை அறுவடை செய்யலாம். இது தவிர வாத்து முட்டைகள் மற்றும் இறைச்சியும் ஒரு கணிசமான இலாபத்தைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.