மரிக்கொழுந்து 

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.  

மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.   இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000  எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும்.  45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. பூங்கொத்தானது காப்பிட்டுலம் வகையைச் சார்ந்ததாகும்.  இருபாலினப் பூக்கள் நடுப்பாகத்திலும் பெண் பூக்கள் ஓரத்திலும் அமைந்திருக்கும்.

தவனத்தில் நெட்டை மற்றும் குட்டை என இரு வகைகள் உள்ளன.  அவற்றில் நெட்டை வகை சற்று உயரமாக (80 செ.மீ வரை) வளரும் தன்மையும், பிளவுபட்ட இலைகளையும், காலம் தாழ்ந்து பூக்கும் தன்மையும் கொண்டதாகும்.  குட்டை வகையில் அனைத்து இலைகளும் செடிகளின் அடிப்பாகத்திலும், மேல்பாகத்திலும் பிளவுபட்டு காணப்படும். சீக்கிரமாக பூக்கும் தன்மை கொண்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து பி கே எம்-1 மரிக்கொழுந்து எனும் மேம்படுத்தப்பட்ட இரகம் வெளியிடப்பட்டுள்ளது. இது உள்ளுர் இரகத்தில் (சின்னமனூர்) இருந்து தேர்வு செய்யப்பட்டதாகும். 

இதன் செடிகள் நேராகவும், அடர்த்தியாகவும் அதிக கிளைகளையும் கொண்டது.  இலைகள் வெள்ளை கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். ஒரு செடியின் எடை சுமார் 38.65 கிராம் கொண்டதாக இருக்கும். 

ஒரு எக்டரிலிருந்து 16.78 டன் பச்சை தழை விளைச்சலாக கிடைக்கிறது.  இதன் மூலம் 20.32 கிலோ வாசைன எண்ணெய் கிடைக்கம்.  இந்த இரகம் சுமார் 145 முதல் 150 நாட்கள் வயதினைக் கொண்டதாகும்.  தமிழ்நாட்டில் வெப்ப மண்பல சமவெளிப் பகுதிகளுக்கு மிகவும் உகந்த இரகமாகும்.

இப்பயிர் வளம் செறிந்த செம்மன் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும் மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன. பூக்கும் பருவத்தில் அதிக அளவு மழை மற்றும் வெப்பம் இருந்தால் கிடைக்கும் எண்ணெயின் அளவு குறைகின்றது.

மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலம் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி – மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.