முயல்களின் தீவனத் தேவை எப்படியெல்லாம் மாறுபடும் தெரியுமா?
** முயல்களின் தீவனத் தேவை
முயல்களின் ஊட்டச்சத்துக்கள் அதன் வயது மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சிறந்த வளர்ச்சியைப் பெற முயலின் வயதையும் உட்கொள்ளும் திறனையும் பொறுத்து உணவளித்தல் வேண்டும்.
பொதுவான ஒரு வகை உணவையே அனைத்து முயல்களுக்கும் கொடுக்க வேண்டும். நல்ல இலாபம் ஈட்ட முயல்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு வகைத் தீவனமும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகைத் தீவனமென இரண்டு வகைகளைப் பின்பற்றுதல் நன்று.
** வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள்
குட்டிகளுக்கான வளர்ச்சிக்கெனப் பல உயிர் மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனம் வயது அதிகரிக்க அதிகரிக்க அளவு குறையும். உட்கொள்ளும் தீவனத்தை விட அதிகமாகவே வளர்ச்சியடையும் குட்டிகளுக்கான தீவனம் அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் எளிய தீனிகளை நாமே தயாரித்து அளிக்கலாம்.
** தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் போது அளிக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள்
தாயிடமிருந்து குட்டி முயல்களைப் பிரிக்கும் 30-45வது நாளில் அதன் தீவனம் பாலில் இருந்து திட நிலையிலுள்ள தீவனங்களுக்கு மாறுகிறது. அப்போது அதிக நார்ச்சத்து மிகுந்த ஸ்டார்ச் குறைந்த தீவனம் அளிக்கவேண்டும்.
அதன்பின் இரண்டு வாரங்கள் கழித்து அதன் செரிக்கும் தன்மை அதிகரிக்கும் போது நல்ல ஸ்டார்ச் சத்து நிறைந்த தீவனங்களை அளிக்கலாம். நல்ல உற்பத்தித் திறன் பெற நன்கு செரிக்கக்கூடிய அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய தீவனங்கள் கொடுத்தல் வேண்டும்.
** சினைத் தருணத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்
சினைத்தருணத்தில் அதிக புரதம், ஆற்றல், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. நல்ல உற்பத்திக்குக் குறைந்தது 18 சதவிகிதம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவை. பெண் முயல்கள் அடிக்கடி கருத்தரித்து குட்டி ஈன்று கொண்டே இருப்பதால் இவற்றுக்கு அதிக கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. குட்டிகளுக்குப் பாலூட்டவும் அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது.
அதே சமயம் குட்டிகள் நீண்ட நாள் பாலூட்ட அனுமதித்தால் அவைகள் குண்டாகி ஏதேனும் நோய் ஏற்படலாம். குட்டி ஈன்ற 21 நாட்களில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.பிறகு குறைய ஆரம்பித்து விடும். அடுத்த சினை தரித்தவுடன் பால் சுரப்பு நாளங்கள் மீண்டும் அதன் வேலையைத் துவக்கிவிடும்.