இஞ்சி சாகுபடியின்போது எவற்றில் கூடுதல் கவனம் செலுத்தணும் தெரியுமா?
இஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும்.
கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக இருப்பின் ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் பயன்படுத்த வேண்டும்.
அது மட்டுமின்றி இஞ்சி சாகுபடி துவங்குவதற்கு முன்பு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பலவகை விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதைத்து 4 முதல் 5 அடி உயரம் நன்கு வளர்ந்த பயிர்களை மடித்து உழவு செய்வதன் மூலம் 25 முதல் 30 டன் தாவரக் கழிவு சேர்ப்பது நிலத்தின் பெளதிக தன்மை/இயற்பியல் தன்மை மிக சிறப்பாக உருவாகி விடும்.
ஆக அங்கக் பொருட்களின் அளவு எந்த அளவு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நிலத்தின் உயிர் இயக்கம் அதாவது நுண் உயிர்களின் இயக்கமும் அதிகரிக்கும்.
அங்ககப் பொருட்களின் அளவு கூடுவது நில வளம் எனவும், நுண்உயிர்களின் இயக்கம் அதிகரிப்பது நில நலம் பேணுதல் எனவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக நிலவளம், நில நலம் ஆகிய இரண்டும் மிக முக்கிய ஆதார செயல்கள் ஆகும். இது அனைத்து வகை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும்.