விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.

தென்னை மரங்களில் பல வகை உண்டு குட்டை, நெட்டை மற்றும் இளநீர் ரகங்கள் என்று. அரசாங்க மற்றும் தனியார் ரகங்கள் அதிகம். தென்னை எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது.

தென்னை நடவு செய்யும்பொழுது விடவேண்டிய இடைவெளி குறைந்தது மரத்திற்கு மரம் இருபது அடி அதிகபட்சம் முப்பது அடி இருக்குமாறு நடவேண்டும்.

கண்டிப்பாக 3×3 அடி அளவில் குழி வெட்ட வேண்டும். கன்று நடுவதற்கு முன் குழியில் அரை அடி உயரத்திற்கு மண்புழு உரம் 5 கிலோ, தொழுஉரம் 10 கிலோ, 1 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 1/4 கால் கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து நிரப்ப வேண்டும். தேவை பட்டால் 1/2 அரைகிலோ நுன்னூட்ட சத்து இடலாம்.

பின்னர் கன்றில் காணப்படும் அனைத்து வேர்களையும் நீக்கிவிடவேண்டும். பின்பு குழியில் செங்குத்தாக வைத்து செடியை சுற்றிலும் சுமார் பத்து கிலோ ஆற்று மணல் நிரப்ப வேண்டும். பின்பு மேலிருந்து அரை அடி ஆழம் இருக்குமாறு விட்டு மண் நிரப்பி விடவேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

குட்டை ரக கன்று நட்ட ஒரு மாதம் கழித்து புது குருத்தோலை வர ஆரம்பிக்கும். மூன்றாவது வருடம் முதல் காய்கள் ஆரம்பிக்கும். மாதம் ஒரு பாளை வெளிவரும்.

தென்னைக்கு சிறு வயது முதலே கற்பூரகரைசல் தெளித்து வந்தால் எந்தவித வண்டுதாக்குதலும் வராது. ஓலைகள் கரும்பச்சை நிறத்தில் திடமாக இருக்கும். பதினைந்து நாள் இடைவெளியில் வேரில் கற்பூரகரைசல் ஊற்றினால் வேர் சம்பந்தமான நோய்களை முற்றிலும் தடுக்கலாம்.

தென்னையை அதிகம் தாக்கும் நோய்கள் வாடல்நோய், காண்டாமிருக வண்டுதாக்குதல், சிகப்பு கூன்வண்டு தாக்குதல், சிலந்தி முதலியவை. கற்பூரகரைசல் மாதம் ஒரு முறை வேரில் அளிப்பதன் மூலம் வண்டு தொல்லையில் இருந்து முற்றிலும் மீளலாம்.

தோப்புகளில் எந்த காரணம் கொண்டும் சாணக்குவியல் மற்றும் எரு குவியல் இல்லாமல் சுத்தமாக இருந்தால் இந்த வண்டுகள் தொல்லையை சமாளிக்கலாம்.

ஐந்து லிட்டர் கோமியம் ஒரு மரத்திற்கு மாதம் ஒருமுறை சம பங்கு தண்ணீருடன் கலந்து வேரில் இடுவதால் சிலந்தி தாக்குதல் கட்டுப்படும். திரட்சியான காய்கள் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து அளிப்பதன் மூலம் செலவில்லா சாகுபடி முறைக்கு வரலாம். அடுத்து ஒரு வருடத்தில் மரத்திற்கு 300 காய்கள் வரை பறிக்கலாம். இது இல்லாமல் மண்புழு உரத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 கிலோ ஒரு மரத்திற்கு வேரில் இடவேண்டும். உயிர் உரங்களை இடுவதால் வாளிப்பான பெரிய கவர்ச்சியான தேங்காய்களை பெறலாம். 

சத்துக்கள் தென்னைக்கு அதிகம் தேவை. அதனால் நாம் எந்த அளவு சத்துக்கள் வேரில் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு திரட்சியான பருப்புகள் உள்ள காய்களும் மற்றும் எண்ணிக்கையும் கிடைக்கும்.

நாம் தயாரிக்கும் இயற்கை கரைசல்களுடன் சிறிது தென்னை மரத்தின் கள் சேர்ப்பதால் கரைசல் விரவில் புளித்து நுன்னுயிர்கள் பெருக்கம் அதிகரிக்கும். தென்னை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மனிதர்களுக்கு பயன்படக்கூடியவை. தென்னை சுமார் நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழும்