தங்கம்போல பராமரித்தால்தான் நிலக்கடையில் அதிக மகசூல் கிடைக்கும்…
ரகங்கள்:
செடி அமைப்பைப் பொருத்தவரை கொத்து, அடர்கொத்து, கொடி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும், கொத்து ரகங்கள்தான் விவசாயிகளால் அதிகம் விரும்பப்படுகிறது. இவை 90 நாட்கள் முதல் 105 நாட்கள் வயது வரை உள்ளதாகும்.
நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்க நிலத்தை தங்கம்போல் பராமரிக்க வேண்டும். இயற்கை உரங்கள் அவசியம் தேவை.
நிலக்கடலை விதைப்பிற்கு 30 நாட்களுக்கு முன்னர் நாட்டு கம்பினை ஏக்கருக்கு 10 கிலோ விதைப்பு செய்ய வேண்டும். இரண்டு அடி உயரம் இருக்கும் போது மடக்கி உழவு செய்து மணிலா சாகுபடி செய்தால் விவசாயிகள் நிச்சயம் 70 மூடைகள் மகசூல் எடுக்கலாம்.
கம்பில் வேர் முண்டுகள் அதிகம் இருப்பதால் மணிச்சத்து இயற்கை சத்து பூமிக்கு கிடைக்கும். இதனால், நிலக்கடலை மகசூல் கூடும்.
எண்ணெய்ச்சத்து குறைவாக இருக்கும். டி.எம்.வி.2, டி.எம்.வி.12 ரகங்கள், அதிகமாக புழக்கத்தில் உள்ளது. ஜே.எல்.24 குறைவான பரப்பளவு மட்டும் சாகுபடியில் உள்ளது.
பட்டம்:
சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், கார்த்திகைப்பட்டம் என்று உள்ளது. இதில் பரவலாக மார்கழிப் பட்டம்தான் அதிக அளவில் சாகுபடியில் உள்ளது.
விதை:
விதைப்பிற்கு ஒரு ஏக்கருக்கு 55 கிலோ விதை பருப்பு தேவை.
விதைநேர்த்தி:
கார்பன்டாசிம் இரண்டு கிராம் ஒரு கிலோவிற்கு என்ற அளவில் இரண்டு நாட்களுக்கு முன்னால் கலந்து வைத்து விதைப்பு செய்வதால் பூச்சிநோய் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
பயிர் எண்ணிக்கை:
ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் அவசியம் இருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1 லட்சத்து 32 ஆயிரம் செடிகள் அவசியம் இருக்க வேண்டும். மகசூல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணியாகும்.
மணிலாவில் ஒரு பூவிற்கு ஐந்து காய்கள் கணக்காகும். 22 முதல் 30 நாள் வரை பூ எடுக்கும்.
பூ எடுக்கும்போது அதிகம் ஈரப்பதம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நவீன முறையில் டிஏபி + பிளானோபிக்ஸ் தெளிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நிலக்கடலை பூஸ்டர் சப்ளை செய்கின்றனர்.
உரம்:
7.14.21 என்பிகே உரம் அளிப்பது சிறந்தது. இதைத்தவிர பேரூட்ட சத்துக்களும் அவசியம் அளிக்க வேண்டும். அப்போதுதான் காய்கள் திரட்சியாக இருக்கும்.
ஜிப்சம் இரண்டு முறை அவசியம் அளிக்க வேண்டும். அடியுரம் போடும்போது 100 கிலோவும் இரண்டாவது களை எடுக்கும்போதும் அவசியம் ஜிப்சம் போடவேண்டும். ஜிப்சம் சிறிது செலவுதான் ஆனால் கீர்த்தி பெரிதாகும்.
பயிர் பாதுகாப்பு:
நிலக்கடலையில் சுருள் பூச்சி மற்றும் புரூடினியாதான் அதிகம் தாக்குகின்றது. சுருள் பூச்சியை குறைப்பதற்கு விதை விதைப்பின்போதே எட்டு வரிசைக்கு ஓர் வரிசை கம்பு விதைப்பு செய்து வைத்திருந்தால் பூச்சி குறையும்.
புரூடினியாவை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு சாகுபடி செய்வது சிறந்தது.
விதை, உழவு, களை, பூச்சி, உரம் என மொத்த செலவு ரூ.35 ஆயிரம் பிடித்தலும், நிச்சயம் 800 கிலோ மகசூல் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், ரூ.64 ஆயிரம் நிகர லாபம் கிடைக்கும்.