Asianet News TamilAsianet News Tamil

காவல் நிலையத்தில் வாலிபர் மர்மச்சாவு… - உறவினர்கள் சாலை மறியல்

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர், மர்மமாக இறந்தார். இதனால், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னை பாரிமுனை பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

young man death in police station
Author
Chennai, First Published Dec 22, 2018, 1:33 PM IST

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர், மர்மமாக இறந்தார். இதனால், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னை பாரிமுனை பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் அஜித்குமார், விக்னேஷ் ஆகியோர் வேலை செய்கிறார்கள்.

கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருடுபோனது. புகாரின்படி உயர்நீதிமன்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமாரின் உறவினருக்கு போலீசார், ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் சென்றனர்.

விசாரணைக்கு அழைத்து சென்ற மகனை லாக்கப்பில் வைத்து அடித்து கொன்று விட்டதாக பெற்றோர் கதறி அழுதனர். மேலும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் சமரசம் பேசிய போலீசாருடன்  கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உதவி கமி‌ஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில் காவல் நிலையத்தில் இறந்த ஜெயக்குமாரின் சடலம், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதே நேரத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், விக்னேஷ் உறவினர்கள் காவல் திரண்டனர். விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் ஜெயக்குமாரை தாக்கியதால் உயிர் இழந்ததாகவும், அதனால் மற்ற 2 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.    

Follow Us:
Download App:
  • android
  • ios