Asianet News TamilAsianet News Tamil

ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்கா இரண்டு மாதங்களில் திறக்கப்படும் – ஆட்சியர் உறுதி…

The environmental park that is set up at Rs.4 crore will be opened in two months - the Collector assures ...
The environmental park that is set up at Rs.4 crore will be opened in two months - the Collector assures ...
Author
First Published Oct 7, 2017, 8:57 AM IST


கன்னியாகுமரி

கன்னியாகுமரி அரசு பழத் தோட்டத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்கா இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என்று இறுதிக் கட்டப் பணிகளை ஆய்வு செய்தபிறகு ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் அறிவித்தார்.

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் முக்கியச் சாலையில் அரசு பழத்தோட்டம் ஒன்று உள்ளது.  திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் அரண்மனைக்கான பழத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மகாராஜா கன்னியாகுமரியில் ஓய்வு எடுப்பதற்காகவும் இந்த பழத்தோட்டம் அமைக்கப்பட்டது. 31 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இப்பண்ணையில் விளையும் பழங்கள் அரண்மனைக்கு அனுப்பப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்தபோது, இந்தப் பழப்பண்ணை தமிழக வேளாண்மைத் துறையின் கீழ் வந்தது.  இப்பழத்தோட்டத்தில் மா,  கொய்யா,  சப்போட்டா,  நெல்லி போன்ற பழ வகைகளும், பிச்சி, மல்லிகை, முல்லை, ரோஜா, குரோட்டன்ஸ் போன்ற மலர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

இங்கு இரு பருவங்களிலும் காய் பலன் தரும் மாமரங்கள் உள்ளன. ஆண்டுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்க்கு பழவகைகளும்,  அலங்காரச் செடிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரூ.4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இதனையொட்டி, பூங்காவில் செயற்கை நீரூற்று,  சிறுவர் பூங்கா,  மூங்கில் பூங்கா, மூலிகைத்தோட்டம்,  பூந்தோட்டம்,  அலங்காரச் செடிகள் மற்றும் மரங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. தற்போது பூங்காவின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் அதிகாரிகளுடன் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இப்பூங்கா இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது, மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்ரின்,   ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன் (வேளாண்மை), தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷீலா ஜான், வேளாண் செயற்பொறியாளர் பா.ஆனந்த பாபு,

உதவிச் செயற்பொறியாளர் தா.ராதாகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் அமல்ராஜ், மண்வள பாதுகாப்பு அலுவலர் ஐயப்பன், கன்னியாகுமரி தோட்டக்கலை அலுவலர் எஸ்.என்.திலீப், உதவி அலுவலர் ஆ.மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios