Asianet News TamilAsianet News Tamil

உரிமம் பெறாத கடைகளுக்கு ரூ. 5 இலட்சம் அபராதம் - மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை...

Rs. 5 lakh fine for who did not get license for their shops in perambalur
Rs. 5 lakh fine for who did not get license for their shops in perambalur
Author
First Published Dec 11, 2017, 8:32 AM IST


பெரம்பலூர்

பெரம்பலூரில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமம் பெறாத கடைகளுக்கு ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் மா.செளமியா சுந்தரி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று உணவு வணிகர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட நியமன அலுவலர் மா.செளமியா சுந்தரி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:

"பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் வாங்க வேண்டும்.

தவறினால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி ரூ. 5 இலட்சம் அபாராதத் தொகையும், ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.

உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கு சிறப்பு முகாம் டிசம்பர் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

இந்த முகாமில் ஆண்டுக்கு ரூ. 12 இலட்சத்திற்குள் விற்பனை, கொள்முதல் செய்யும் உணவு வணிகர்கள் ரூ. 100 செலுத்துச் சீட்டு செலுத்தி, ஆதார் அட்டை நகல், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ. 12 லட்சத்திற்கு மேல் விற்பனை, கொள்முதல் செய்யும் வணிகர்கள் ரூ. 2 ஆயிரம் முதல் முதல் ரூ. 5 ஆயிரம் வரை செலுத்த வேண்டும்.

ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1, இடத்துக்கான பத்திரம் நகல், உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விடுதிகள் வைத்திருப்பவர்கள் அதை கையாளுபவர்களுக்கான மருத்துவச்சான்று ஆகியவற்றுடன் வந்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே பதிவு, உரிமம் உள்ளவர்கள், அது காலாவதியாவதற்கு முன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், வணிகர்கள் தங்களது கடைகளுக்கு அந்தந்த வட்டாரங்களில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் உரிமம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் குறித்த விளக்கங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2-ஆம் தளத்தில் இயங்கும் உணவு பாதுகாப்புப் பிரிவு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

உணவுப் பொருள்களில் கலப்படம் தொடர்பான புகார்களையும் மக்கள் தெரிவிக்கலாம். இப்புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

இந்த முகாமில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios