Asianet News TamilAsianet News Tamil

நூறு நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்…

People Struggle Declaring Remuneration in a 100-Day Employment Scheme...
People Struggle Declaring Remuneration in a 100-Day Employment Scheme...
Author
First Published Nov 9, 2017, 6:34 AM IST


அரியலூர்

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து, அரியலூரில் உள்ள கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அணைக்குடம் ஊராட்சியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஏரி, வாய்க்கால் தூர் வாருதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு சுமார் ஆறு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

அதேபோன்று அந்த ஊராட்சியில் தமிழக அரசால் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு செய்து, அவர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன.

ஆனால் அரசு அறிவித்த ஆணைப்படி தகுதி வாய்ந்த ஏழை, எளிய மக்களை அதிகாரிகள் தேர்வு செய்யாமல் ஒருதலை பட்சமாக தேர்வு செய்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இக்கோரிக்கைகள் குறித்து மக்கள் தரப்பில் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், அவர்களுக்கு ஊதியம் வழங்கவும், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ஆடு, மாடு வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அணைக்குடம் ஐயனார் கோவில் பேருந்து நிறுத்தம் செயங்கொண்டம் - தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு மறுப்புத் தெரிவித்த கிராம மக்கள், இதுதொடர்புடைய தா.பழூர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால்தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து காவலாளர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் உள்பட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios