Asianet News TamilAsianet News Tamil

பட்டாசு வெடித்ததற்கும், மெகந்தி வைத்ததற்கும் தண்டனையா? பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

Parents besieged school
Parents besieged school
Author
First Published Oct 22, 2017, 11:26 AM IST


பட்டாசு வெடித்ததற்காகவும், கையில் மெகந்தி வைத்ததற்காகவும் மாணவர்களை, பள்ளி நிர்வாகம் தண்டித்ததைக் கண்டித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம், போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் பாலக்கரை கீழப்புதூரில் சர்வைட் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 

தீபாவளி பண்டிகையை விடுமுறையை அடுத்து நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. காலை 9 மணி அளவில் இறை வணக்கம் தொடங்கியது. அப்போது தீபாவளி பண்டிகைக்கு யாரெல்லாம் பட்டாசு வெடித்தது என்றும், அவர்கள் கையை தூக்குங்கள் என்றும் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர்.

7 பேரைத் தவிர மாற்ற மாணவ-மாணவிகள் கையைத் தூக்கினர். பட்டாசு வெடிக்காதவர்களை ஆசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மற்ற மாணவ-மாணவிகளை கைகளைக் கட்டிக் கொண்டு இறை வணக்கம் முடியும் வரை தலை குனிந்து நிற்கும்படி, தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதேபோல், கையில் மெகந்தி வைத்திருந்த ஒரு மாணவியை ஆசிரியர் ஒருவர் அடித்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த சிலர் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என கேள்வி கேட்டனர். 

அதற்கு பள்ளி நிர்வாகம், எங்களுக்கு கல்வி துறை அதிகாரிகளிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில்தான் மாணவ-மாணவிகளை கண்டித்ததாகவும் தெரிவித்தது.

பள்ளி நிர்வாகம் கூறியதை அடுத்து, பெற்றோர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலர், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். இது தொடரப்க பாலக்கரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios