Asianet News TamilAsianet News Tamil

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு பள்ளி மாணவி பலி;

Government school student killed by dengue fever in Tirupur
Government school student killed by dengue fever in Tirupur
Author
First Published Oct 12, 2017, 7:27 AM IST


திருப்பூர்

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பலியானார். இதனால் அந்தப் பகுதி மக்களிடையே சோகமும், அச்சமும் தொற்றிக் கொண்டது.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ளது மஞ்சப்பூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (44). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சௌந்தரி (37). இவர்களின் மகள்கள் தனுஸ்ரீ (14), சண்முகப்பிரியா (11), மகன் கௌசிக் (5).

கடந்த சில வருடங்களாக சௌந்தரி மங்கலம் அருகே புக்கிலிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதில் சண்முகப்பிரியா மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மாணவி சண்முகப்பிரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவரை மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவருடைய பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், அவரை பரிசோதித்து மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பினர். ஆனால், அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. மாறாக தீவிரமடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சண்முகப்பிரியா சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சண்முகப்பிரியா, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மஞ்சப்பூருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

டெங்குவால் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios