Asianet News TamilAsianet News Tamil

நீங்க பண்ற தாமதத்தால் ஏமாந்து போறது ஏழை விவசாயிதானே... வேதனையா இருக்கே!! ராமதாஸ்

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, 15 நாட்கள் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் சம்பா நெல் நடவுப் பணிகள் தொடங்கவில்லை. காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதும், இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதும் வருத்தம் அளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss statements for cauvery water
Author
Thanjavur, First Published Aug 28, 2019, 12:45 PM IST

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, 15 நாட்கள் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் சம்பா நெல் நடவுப் பணிகள் தொடங்கவில்லை. காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதும், இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதும் வருத்தம் அளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதியும், ஒருபோக சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கிலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும். நடப்பாண்டில் குறுவைக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலையில், இயற்கையின் கொடையால் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தண்ணீர் திறந்து விட்டார். வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 10 நாட்களில் கடைமடை பாசனப் பகுதிகளை தண்ணீர் சென்றடைவது வழக்கமாகும். ஆனால், இம்முறை 15 நாட்கள் ஆகியும் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு காரணம், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதும், கிளை ஆறுகள் முழுமையாக தூர்வாரப்படாததும் தான் என்று கூறப்படுகிறது.

கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்தால் மட்டும் தான் நேரடி விதைப்பு அல்லது நாற்று நடவு மூலம் சம்பா சாகுபடியைத் தொடங்குவது சாத்தியமாகும். எனவே, சம்பா சாகுபடி குறித்த காலத்தில் தொடங்க வேண்டும் என்றால் கடைமடை பாசனப் பகுதிகளை தண்ணீர் விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இன்றைய சூழலில் அது சாத்தியமற்றது அல்ல. மேட்டூர் அணையிலிருந்து கடந்த 15 நாட்களாகவே காவிரியில் வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப் படுகிறது. கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் சராசரியாக வினாடிக்கு 3000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இது போதுமானதல்ல என்பதால் தான் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி அல்லது 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தாலே அடுத்த சில நாட்களில் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைந்து விடும். தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு இதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் சம்பா சாகுபடி பணிகளை வெற்றிகரமாக தொடக்கி விடலாம். அதற்கு பிறகு தண்ணீர் தேவை குறைந்து விடும் என்பதால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைக்கலாம். மேட்டூர் அணையிலும், கர்நாடக அணைகளிலும் இப்போதுள்ள தண்ணீரின் அளவையும், இனி கிடைக்கவுள்ள நீரின் அளவையும் வைத்துப் பார்க்கும் போது இது சாத்தியமான ஒன்று தான். மேட்டூர் அணையிலிருந்து இப்போது வினாடிக்கு 10,600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 12.50 டி.எம்.சி நீரும், வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 18.75 டி.எம்.சி நீரும் கூடுதலாக செலவாகும்.

மேட்டூர் அணையில் இன்றைய நிலையில் மொத்தம் 89 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. ஆகஸ்ட் மாதம் வரையிலான தண்ணீரை கர்நாடகம் வழங்கி விட்ட நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு 36.76 டி.எம்.சி, அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி என அடுத்த இரு மாதங்களில் 56.98 டி.எம்.சி நீர் கொடுக்க வேண்டும். கர்நாடக அணைகளின் கொள்ளளவு 104.55 டி.எம்.சி எனும் நிலையில், இப்போது 103.64 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 20,570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடிக்க இந்த நீர் போதுமானது. அதுமட்டுமின்றி, அக்டோபர் மாதத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி விடும் என்பதால் சம்பா சாகுபடிக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கும். எனவே, எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் தண்ணீர் திறக்க தயங்கத் தேவையில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் குறைந்தது 15 பருவ சாகுபடி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், குறுவை சாகுபடி முழுமையாக பொய்த்து விட்ட நிலையில், 4 பருவங்கள் மட்டுமே சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. நடப்பு சம்பா பருவ சாகுபடி நிறைவாக நடந்தால் தான் விவசாயிகள் கடன் சுமையிலிருந்து ஓரளவாவது மீள முடியும். அதற்கு வசதியாக கடைமடை பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க அரசு ஆணையிட வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios