Asianet News TamilAsianet News Tamil

இந்த போட்டியிலும் நியூசிலாந்தை சுருட்டிய இந்திய பவுலர்கள்!! இந்திய அணிக்கு எளிய இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியை பெரிய ஸ்கோரை எட்டவிடாமல் சுருட்டியுள்ளது இந்திய அணி.
 

new zealand set easy target for india in third odi
Author
New Zealand, First Published Jan 28, 2019, 11:28 AM IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியை பெரிய ஸ்கோரை எட்டவிடாமல் சுருட்டியுள்ளது இந்திய அணி.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. 

தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் இந்த போட்டியிலும் வழக்கம்போலவே வந்ததும் நடையை கட்டினர். ஷமி வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஸ்லிப்பில் நின்ற ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார் முன்ரோ.

இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் 13 ரன்களில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கப்டில். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் அனுபவ ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இவர்களும் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். 

இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்து நிதானமாக ஆடிவந்த நிலையில், வில்லியம்சனை வீழ்த்தினார் சாஹல். சாஹல் வீசிய பந்தை வில்லியம்சன் டிரைவ் ஆட, மிட் விக்கெட் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா, அபாரமாக டைவ் அடித்து அந்த கேட்ச்சை பிடித்தார். அதனால் வில்லியம்சன் 48 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

new zealand set easy target for india in third odi

59 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், டெய்லரும் டாம் லதாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடியதுடன் ரன்களையும் சேர்த்தனர். சாஹல், குல்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பவுலிங்கை தெளிவாக ஆடி, இருவரும் அரைசதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்களை சேர்த்த நிலையில், லதாம் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே அவரை வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து பிரேக் கொடுத்தார் சாஹல். சாஹலின் பந்தில் 51 ரன்களில் லதாம் ஆட்டமிழந்தார். 

new zealand set easy target for india in third odi

இந்த பார்ட்னர்ஷிப் 38வது ஓவரில் உடைக்கப்பட்டது. அதன்பிறகு டெய்லருடன் ஜோடி சேர்ந்த நிகோல்ஸை, அருமையான ஸ்லோ பவுன்ஸரில் 40வது ஓவரின் மூன்றாவது பந்தில் வீழ்த்திய பாண்டியா, தனது அடுத்த ஓவரில் சாண்ட்னெரையும் வீழ்த்தினார். சதத்தை நெருங்கிய டெய்லரை 93 ரன்களில் வீழ்த்தினார் ஷமி. இதையடுத்து அந்த அணியின் டெயிலெண்டர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

new zealand set easy target for india in third odi

டெய்லர் - லதாம் ஜோடியை பிரித்ததுதான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இல்லையெனில் களத்தில் நிலைத்துவிட்ட அந்த ஜோடி, கடைசி 10 ஓவர்களில் அடித்து ஆடி ரன்களை குவித்திருக்கும். ஆனால் அதற்கு அனுமதிக்காத இந்திய பவுலர்கள், அவர்கள் இருவரையுமே பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் வீழ்த்தினர்.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளையும் ஹர்திக், சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios