Asianet News TamilAsianet News Tamil

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய கோப்பையை வென்றது இந்தியா ஹாக்கி அணி…

Indian hockey team won the Asian Cup after 10 years ...
Indian hockey team won the Asian Cup after 10 years ...
Author
First Published Oct 23, 2017, 8:57 AM IST


பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அனி வாகைச் சூடி அசத்தியது.

இந்தியா - மலேசிய அணிகள் மோதிய பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்று வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று மாலை நடைபெற்றது.

ஆசிய கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணி மலேசியாவுடன் மோதுவது இது முதல் முறையாகும். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர் இந்திய வீரர்கள். மலேசிய வீரர்களும் சற்றும் சளைக்காமல் விளையாடினர்.

எனினும், ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே தனது முதல் கோலை பதிவு செய்தது இந்தியா. ரமன்தீப் சிங், இந்த கோலை அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் உள்பட இந்தியாவின் இரு கோல் முயற்சிகளை மலேசிய கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். எனினும், 29-வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் அணியின் கோல் எண்ணிக்கையை 2-ஆக உயர்த்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மலேசியா தனது முதல் கோல் வாய்ப்புக்காக கடுமையாகப் போராடி 50-வது நிமிடத்தில் அணியின் ஷாரில் சாபா ஒரு கோல் அடித்தார்.

அந்த உத்வேகத்தில் மீண்ட மலேசிய அணியினர், கடைசி 10 நிமிடங்களில் ஆட்டத்தை சமன் செய்ய ஆக்ரோஷமாக ஆடினர். எனினும், இந்திய பின்கள வீரர்கள் அரண்போல் தடுப்பாட்டம் ஆட, இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

 இந்த வெற்றியின்மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ள இந்தியா 3-வது முறையாக ஆசிய சாம்பியன் ஆகியுள்ளது. முன்னதாக, கடந்த 2007 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios