Asianet News TamilAsianet News Tamil

வெஸ்ட் இண்டீசை வெளுத்துக்கட்டிய கோலி டீம்…. 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி !!

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சதம் அடித்தனர்.இதையடுத்து இந்தத் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது

india won by 224 runs against west indies
Author
Mumbai, First Published Oct 30, 2018, 7:20 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும், புனேயில் நடந்த 3-வது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் ‘டை’ யில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.
india won by 224 runs against west indies
‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். ஷிகர் தவான் முதலில் சற்று நிதானம் காட்டினாலும் பிறகு அடித்து ஆடினார்.

11.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (38 ரன்கள், 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) கீமோ பால் பந்து வீச்சில் கீரன் பவெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட்கோலி 17 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

india won by 224 runs against west indies

3-வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட்இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இருவரும் அவ்வப்போது பந்தை சிக்சருக்கு தூக்கியும் குதூகலப்படுத்தினார்கள். இதனால் ரன் விரைவாக உயர்ந்தது. 33-வது ஓவரில் பாபியன் ஆலென் பந்து வீச்சில் ரோகித் சர்மா பவுண்டரி விளாசி சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 21-வது சதம் இதுவாகும். 16.2 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய இந்திய அணி 33.1 ஓவர்களில் 200 ரன்னையும், 42.4 ஓவர்களில் 300 ரன்னையும் கடந்து அசத்தியது.
india won by 224 runs against west indies
அணியின் ஸ்கோர் 43.5 ஓவர்களில் 312 ரன்னாக உயர்ந்த போது 4-வது இரட்டை சதத்தை அடித்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா, ஆஷ்லே நர்ஸ் வைடாக வீசிய பந்தை அடித்து ஆடி ஹேம்ராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரோகித் சர்மா 137 பந்துகளில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா-அம்பத்தி ராயுடு இணை 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் திரட்டியது.

அடுத்து விக்கெட் கீப்பர் டோனி களம் கண்டார். அதிரடியாக ஆடிய அம்பத்தி ராயுடு 80 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் சதத்தை எட்டினார். அவர் அடித்த 3-வது சதம் இதுவாகும். சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே அம்பத்தி ராயுடு (100 ரன்) ரன்-அவுட் ஆனார். டோனி 15 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கெமார் ரோச் பந்து வீச்சில் ஹேம்ராஜிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது..

india won by 224 runs against west indies
பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹேம்ராஜ் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஷாய் ஹோப் ரன் எதுவும் எடுக்காமலும், கீரன் பவெல் 4 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்-அவுட் ஆனார்கள். இருவரையும் முறையே குல்தீப் யாதவ், கேப்டன் விராட்கோலி ஆகியோர் ரன்-அவுட் செய்தனர்.

20 ரன்னுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி அந்த சரிவில் இருந்து கடைசி வரை மீள முடியவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 1-ந் தேதி நடக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios