Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா; தொடர்ந்து 8-வது வெற்றியை பெற்று அதிரடி…

India to shake Australia Continuing with 8th victory ...
India to shake Australia Continuing with 8th victory ...
Author
First Published Sep 22, 2017, 11:10 AM IST


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் ஃபாக்னர், ஆடம் ஸம்பா ஆகியோருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்ய, அஜிங்க்ய ரஹானேவும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர்.

இந்தியா 19 ஓட்டங்களாய் எட்டியபோது ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 14 பந்துகளில் 7 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் நாதன் கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். 

பின்னர் அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது இந்தியா. இதன்பிறகு விராட் கோலி 60 பந்துகளில் அரை சதமடிக்க, அஜிங்க்ய ரஹானே 62 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

இந்தியா 23.4 ஓவர்களில் 121 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. ரஹானே 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரன் ஔட்டானார். இந்த ஜோடி 111 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து மணீஷ் பாண்டே 3 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் ஸ்டெம்பை இழந்தார். இதையடுத்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் கேதார் ஜாதவ். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்தியா 186 ஓட்டங்களை எட்டியபோது கேதார் ஜாதவ் 24 ஓட்டங்களில் கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  பின்னர், விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி களமிறங்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 92 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் போல்டு ஆனார். 107 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் குவித்த கோலி, சதம் விளாசும் வாய்ப்பை நழுவவிட்டார். 

கோலியைத் தொடர்ந்து தோனி 5 ஓட்டங்களில் நடையைக் கட்ட, 39.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் எடுத்திருந்தது இந்தியா.

பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. கடைசிக் கட்டத்தில் புவனேஸ்வர் குமார் 33 பந்துகளில் 20 ஓட்டங்கள், ஹார்திக் பாண்டியா 26 பந்துகளில் 20 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 252 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. ஜஸ்பிரித் பூம்ரா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஹில்டன் கார்ட்ரைட், டேவிட் வார்னர் ஆகியோர் தலா ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

யடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்தார் டிராவிஸ் ஹெட். இந்த ஜோடி 76 ஓட்டங்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் 39 ஓட்டங்கள் சேர்த்து ஔட்டாக அந்த அணியின் சரிவு ஆரம்பமானது.

பின்னர் வந்த மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 14 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், சாஹல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். 

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தனியாளாகப் போராடிய ஸ்மித், ஆஸ்திரேலியா 138 ஓட்டங்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். அவர் 76 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் சேர்த்து பாண்டியா பந்துவீச்சில் மாற்று ஆட்டக்காரரான ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு 33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-வது பந்தில் மேத்யூ வேட் 2 ஓட்டங்கள், 3-வது பந்தில் ஆஷ்டன் அகர் 0 ஓட்டங்கள், 4-வது பந்தில் பேட் கம்மின்ஸ் 0 ஓட்டங்கள் கொடுத்து மூவரையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 

பின்னர் கோல்ட்டர் நீல் களமிறங்க, மறுமுனையில் மார்கஸ் ஸ்டோனிஸ் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இதனிடையே கோல்ட்டர் நீல் 8 ஓட்டங்களில் வெளியேற, கேன் ரிச்சர்ட்சன் களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்டோனிஸ் 58 பந்துகளில் அரை சதமடிக்க, ரிச்சர்ட்சன் ரன் ஏதுமின்றி புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இதனால் ஆஸ்திரேலியா 43.1 ஓவர்களில் 202 ஓட்டங்கக்கு சுருண்டது. ஸ்டோனிஸ் 65 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆட்டம் இந்தூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios