Asianet News TamilAsianet News Tamil

இரட்டை சதத்தை நெருங்கிய கோலி.. பிராட்மேனின் ரெக்கார்டை தகர்த்து சாதனை.. முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், விராட் கோலி இரட்டை சதத்தை நெருங்கிவிட்டார். டி பிரேக் வரை இந்திய அணி 473 ரன்களை குவித்துள்ளது. கோலி 194 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரட்டை சதத்திற்கு இன்னும் 6 ரன்களே தேவை என்பதால், கோலி இரட்டை சதமடிப்பது உறுதி. 
 

virat kohli breaks don bradman test record as a captain
Author
Pune, First Published Oct 11, 2019, 2:28 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். அகர்வாலுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் இணைந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்தது. கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தை கோலியும் ரஹானேவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து தங்களது அனுபவத்தை பயன்படுத்தி, ரபாடா, நோர்ட்ஜே ஆகிய இருவரின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். ரஹானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்த கோலி, சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடினார்.

virat kohli breaks don bradman test record as a captain

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 356 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் கோலி அடித்து ஆடி விரைவாக ரன்களை குவித்தார். மெதுவாக தொடங்கிய ஜடேஜாவும் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்தார். டி பிரேக் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் அடித்துள்ளது. கோலி 194 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரட்டை சதத்திற்கு இன்னும் 6 ரன்களே தேவை என்பதால் டி பிரேக்கிற்கு பின்னர் அதை அடித்துவிடுவார். 

கோலி இன்னும் 6 ரன்கள் அடித்தால், இது கோலியின் 7வது இரட்டை சதமாக அமையும். கோலி கேப்டனான பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்களை கடப்பது இது 9வது முறை. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டான் பிராட்மேனை(8முறை) பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.

Follow Us:
Download App:
  • android
  • ios