Asianet News TamilAsianet News Tamil

பழைய வீட்டை இடிக்கும்போது என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

what are the procedure for demolishing house
what are the procedure for demolishing house
Author
First Published Nov 20, 2017, 2:17 PM IST


 

படாத பாடுபட்டு வீட்டைக் கட்டிமுடிப்பது ஒரு சாதனை என்றால் பழைய வீட்டை முற்றிலும் அகற்றிவிட்டு வேறு வீடு கட்டுவது அதைவிடவும் பெரிய சாதனை. 

பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதியதாக வேறு கட்டமைப்பை அமைக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. 

முதலாவது, காங்கிரீட் கட்டமைப்புகள் தமது வலுவையும், பாதுகாப்பையும் இழந்து விடுவது. 

இரண்டாவது, கட்டிட அமைப்பை தற்கால வசதிகளுக்கேற்ற முறையில் நவீனமாக மாற்றிக் கொள்ள விரும்புவது.

பழைய கட்டுமான அமைப்பை முற்றிலுமாக அகற்ற முடிவு செய்தபின்பு, மேற்கொண்டு என்னென்ன செய்வது?

முதலில், பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும்  துறையில் அனுபவமிக்க  காண்டிராக்டரை அணுக வேண்டும். நல்ல தரமான இயந்திரங்கள் மற்றும் திறமைமிக்க வல்லுனர்கள் இந்த விஷயத்தில் மிக அவசியம். 

தற்போதைய டெக்னாலஜி முறைகளை அறிந்து அதன்படி அவர்கள் செயல்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் அவர்கள் வேலையை முடிக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாதுகாப்பு அம்சங்கள்

மிகப்பழைய வீடுகளை இடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியம். அருகாமையில் உள்ள வீடுகள் அல்லது மற்ற கட்டிட அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். 

பழைய காங்கிரீட் அமைப்புகளை இடிக்கும்போது அவை திடீரென்று சாய்ந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடிக்கும்போது உண்டாகும் தூசு, தும்புகளால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தகரத்திலான தடுப்புகளை அமைக்க வேண்டும். 

பணியிலிருக்கும் ஆட்களின் பாதுகாப்பு அம்சங்களையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். பழைய கட்டிடத்தை இடிப்பது மட்டுமல்லாமல் இடிபாடுகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவது மிக்க அவசியமானதாகும். 

இந்த இரண்டு வேலைகளையும் ஒரே காண்ட்ராக்டரே செய்வதுபோல பேசிக் கொள்வதும் நல்ல முறையாகும். இடிபாடுகளை அகற்றி, அவற்றைத் தக்க இடத்தில் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் போடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

பொருட்களின் மறு உபயோகம்

பழைய கட்டுமானங்களை இடிக்கும்போது அதிலுள்ள மரக்கதவுகள், ஜன்னல்கள், இரும்பு சாமான்கள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக பிரித்தெடுக்க வேண்டும். அவை மீண்டும் உபயோகப்படுத்தும் விதமாக இருக்கும்பட்சத்தில் நல்ல விலைக்கு விற்பனை செய்து விடலாம்.

காப்பீடு உள்ளதா..?

கட்டிடத்தை இடிப்பதற்கு காண்டிராக்டரை நியமிக்கும்போது வேலையில் அவர்களது அனுபவங்களை மட்டும் பார்க்காமல், அங்கீகாரம் பெற்றவர்களா என்பதையும் கவனிக்க வேண்டும். 

அடுக்கு மாடிக்கட்டிடமாக இருக்கும்பட்சத்தில், இடிக்கும் வேலைகளில் இருக்கும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களுக்கு  இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒப்பந்தம் முக்கியம்

பழைய கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்துவதென்பது எளிதான விஷயமல்ல. அதில் ஈடுபடுவோர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருப்பவர்கள் ஆகியோர்களது பாதுகாப்பை பல கட்டங்களில் நாம் உறுதி செய்து கொள்வது முக்கியம். 

இடிப்பது, இடித்தவற்றை அப்புறப்படுத்துவது, என்னென்ன வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஆகும், மொத்தமாக எவ்வளவு நாட்களுக்குள் வேலை முடியும் என்ற தகவல்களை காண்ட்ராக்டரிடம் பேசிக்கொள்வது நல்லது. 

அந்த விபரங்கள்  கொண்ட ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட இருவரும் போட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios