Asianet News TamilAsianet News Tamil

மதுரையைக் கலக்கும் போஸ்டர்ர்ர்ர் அரசியல்... அழகிரி அல்ல... இது டிடிவி தினகரன் ஸ்டைல் !

wall posters in madurai attract public stick by ttv dinakaran supporters
wall posters in madurai attract public stick by ttv dinakaran supporters
Author
First Published Nov 22, 2017, 3:05 PM IST


மதுரையில் புகழ்பெற்ற அரசியல் தளம் போஸ்டர்கள் தான்! சுவரொட்டிகளில் சிக்கி சின்னா பின்னமாகாத அரசியல் தலைகளும் இல்லை, சுவர்களும் இல்லைதான்! 

கூடல் நகராம் மதுரையில் கூடும் இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் தலைகாட்டும். சினிமா போஸ்டர்கள் ஒரு புறம் என்றால், அவற்றை எல்லாம் மீறி அதிகம் ஒட்டப்படுவது அரசியல் ரீதியிலான போஸ்டர்கள்தான். மதுரை என்றாலே போஸ்டர்கள் தான் என்ற அளவுக்கு, சுவரொட்டிகளுக்கான மவுசை அதிகரிக்கச் செய்தவர்கள் திமுக., தலைவர் மு.கருணாநிதியில் மகனான மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்! 

மதுரை மாநகரையே அல்லோலகல்லோலப் படுத்தும் அளவுக்கு போஸ்டர்கள் நிறைந்திருக்கும் நாளாக அழகிரியின் பிறந்த நாள் அமைந்திருக்கும். அரசியல் எதிரிகளைக் கையாளும் வகையிலாகட்டும், வாழ்த்துகளைப் பகிர்வதாகட்டும், எல்லாம் போஸ்டர்கள்தான் செய்திகளைச் சொல்லும்.

ஆனால்,  அண்மைக் காலமாக அழகிரி அமைதியாக இருக்கிறார். தீவிர அரசியலில் ஈடுபடாமல், ஒதுங்கியிருப்பதால், போஸ்டர்களின் ஆதிக்கமும் குறைந்துதான் போயிருக்கிறது. இந்நிலையில் மதுரை நகரின் போஸ்டர் ஒட்டுநர்களுக்கு புது உத்வேகம் கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். 

தினகரனின் ஆதரவாளர்கள்,  மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பெரும்பாலானவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.  அதில், 17.11.2017 அன்றைய நிகழ்வை வரலாறு மன்னிக்காது. துரோகிகளே நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளுக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார் தினகரன். அதனை ஒரு அரசியல் ஆயுதமாகவும் கொண்டு, எடப்பாடி பழனிசாமி, மற்றும் பன்னீர்செல்வம் கோஷ்டிகளை வறுத்தெடுத்து வருகிறார். இதனை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டரை அடித்து ஒட்டியிருக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

ஏற்கெனவே ஆர்.கே.நகர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளதால், இந்த போஸ்டர் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குக் கிடைக்கும் என்று எடப்பாடி தரப்பினர் நம்பிக்கை கொண்டிருந்தாலும், இப்போது இரு அணிகளிலும் மனரீதியாக பிளவு ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளும் உலா வரத்தான் செய்திருக்கின்றன. இதைத்தான் தினகரனும் எதிர்பார்த்திருக்கிறார். எனவே அடுத்த போஸ்டர் அதிரடி யுத்தம் மதுரையில் தினகரன் ஆதரவாளர்களிடம் இருந்தே எதிர்பார்க்கலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios