Asianet News TamilAsianet News Tamil

திமுக, காங்கிரஸ் வெற்றிக்கு முழுவீச்சில் பாடுபடுவோம்! அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம்! போர்வாளை சுழற்றும் வைகோ!!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் வெற்றிக்கு மதிமுகவினர் முழுவீச்சில் பாடுபட வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko statement on by election
Author
Tamil Nadu, First Published Sep 22, 2019, 5:21 PM IST

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி சார்பாக நாங்குநேரியில்  காங்கிரசும் விக்ரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகிறது. இருதொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிக்கு மதிமுகவினர் பாடுபட வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு அளவில் களத்தில் பணியாற்றும்.

vaiko statement on by election

தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்.தமிழக சட்டமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மறுத்துவிட்டதை இரண்டு ஆண்டு காலமாக மறைத்து, தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கழுத்து அறுத்த அதிமுக அரசின் செயலை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை படுகொலை செய்த அதிமுக அரசின் கொடுஞ்செயலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக ஆக்குகின்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு, வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் துணைபோய் இருக்கிறது.

vaiko statement on by election

மேற்கு மாவட்டங்களில் மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரீட் கார்ப்ரேஷன், விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைத்து, மிக உயர் அழுத்த மின்சாரத்தைக் கொண்டுசெல்ல, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பணிகளைத் தொடங்கி உள்ளது. இதனை எதிர்த்துப் போராடி வரும் பொதுமக்களையும், விவசாயிகளையும் காவல்துறையின் அடக்குமுறையை ஏவி எடப்பாடி அரசு ஒடுக்கி வருகிறது.இதே நிலைமைதான் சேலம் - சென்னை எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் நேர்ந்திருக்கிறது.

நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ஜ.க. அரசின் பாதம் தாங்கியாகச் செயல்படும் பழனிச்சாமி அரசு புதிய கல்விக் கொள்கையை முந்திக்கொண்டு நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது.மத்திய அரசின் ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் வெளிமாநில மக்கள் வந்து குடியேறுவதற்கு இந்த அரசு வழிவகை செய்திருக்கிறது.

vaiko statement on by election

தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் பெற்று, தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்புக்களை பறிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோகிறது.மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்துவிட்டு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ எழுந்துவிட்டது. அதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளித்தார்கள்.

vaiko statement on by election

தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் மக்கள் விரோத அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் காத்திருக்கின்றார்கள். விக்கிரவாண்டி, நாங் குநேரி இடைத்தேர்தல்களில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மறுமலர்ச்சி தி.மு.கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. புதுவை மாநில நிர்வாகிகள், கழகக் கண்மணிகள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios