Asianet News TamilAsianet News Tamil

அப்ப அந்த ராமலிங்கம் அன்ட் கோ யாரு? வண்டவாளம் எல்லாம் சி.பி.ஐ. தண்டவாளத்தில் ஏறும் பாரு... CM க்கு சிக்னல் கொடுக்கும் டி.ஆர்.பாலு!

டெண்டர் ஊழல்களின் வண்டவாளம் எல்லாம் சி.பி.ஐ. விசாரணையில் தண்டவாளத்தில் ஏறும்போது எங்கள் தலைவரின் தகுதி எடப்பாடி பழனிச்சாமியின் கண்களுக்கு நன்றாகவே தெரியும் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் - மத்திய முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

TR Balu Statement Against Edappadi Palanisamy
Author
Chennai, First Published Oct 21, 2018, 3:57 PM IST

“இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாத முதலமைச்சர் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல் உளறிக்கொட்டியிருக்கிறார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த போது நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புக்குரிய சாதனைகள் எதையும் புரிந்துகொளாமலே கொச்சைப்படுத்த முனைந்திருக்கிறார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி.  சாலைப்பணிகளை  செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்யும்  அதிகாரம் எல்லாம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. “1988 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்” கீழ் அமைக்கப்பட்டு இந்த ஆணையம் 1995-லிருந்து தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 

TR Balu Statement Against Edappadi Palanisamy

ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை முழுக்க முழுக்க முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே தன்னாட்சி பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் தன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் “கமிஷன், கலெக்சன், கரெப்சனுக்காக”என்றே திட்டமிட்டு விடப்படும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை ஒப்பிடுவதே முதல் தவறு. 

குறைந்தபட்சம் அவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களிடம் கேட்டிருந்தால் இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளும்படி பழனிசாமிக்கு போதித்திருப்பார்கள்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய சில டெண்டர்களை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர், “ஒரு கிலோ மீட்டருக்கு 8.78 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள்” என்று எழுதிக் கொடுத்ததைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே கக்கியிருக்கிறார். 

ஆனால், “செங்கம்பள்ளி - கோவை - கேரளா” எல்லை வரை உள்ள  82 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைப் பணி கிலோமீட்டருக்கு 4.14 கோடி ரூபாய் மதிப்பிலும், 125 கிலோ மீட்டர் தூரம் உள்ள “திருச்சி- மதுரை” தேசிய நெடுஞ்சாலை பணி ஒரு கிலோ மீட்டருக்கு 3.36 கோடி ரூபாய் என்ற அளவிலும், கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து பூந்தமல்லி வரையுள்ள 300 கிலோ மீட்டர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஒரு கிலோ மீட்டருக்கு 3.35 கோடி ரூபாய் மதிப்பிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியதை வசதியாக மறைத்து, தனது ஊழல் துர்நாற்றத்திற்கு சாம்பிராணி போட்டு மறைக்க முயற்சி செய்திருக்கிறார். “வடக்கு- தெற்கு காரிடார் தேசிய நெடுஞ்சாலை  (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி) பகுதிகள் சாலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட “சேலம்- செங்கம்பள்ளி” சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5.65 கோடி ரூபாய் மட்டுமே ஆணையம் வழங்கியிருக்கிறது. 

TR Balu Statement Against Edappadi Palanisamy

ஆனால் கிலோ மீட்டருக்கு 12 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு வெட்கம் நாணம் ஏதுமின்றி அவித்துவிட்டுள்ளார்.

“ஒரு கிலோ மீட்டருக்கு எத்தனை கோடி ரூபாய்?” என்று மதிப்பீடு செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு அம்சங்களைப் பார்க்கிறது. அது நான்கு வழிச்சாலையா, இரு வழிச் சாலையா, ஆறு வழிச்சாலையா, எத்தனை மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது, தரைப்பாலங்கள் எத்தனை, சாலையின் உயரம் எவ்வளவு, ஆற்றுப் பகுதிகளில் அமைக்க வேண்டிய சாலையா என்பதையெல்லாம் ஆராய்ந்து, உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை வடிவமைத்து மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. 

ஆனால் அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள, அல்லது போடப் போகின்ற நெடுஞ்சாலைகள் ஊழலுக்காவே - கொள்ளையடிப்பதற்காகவே வடிவமைக்கப் படுகிறது.  உலக தரமில்லை, உள்ளூர் தரத்திலேயே சாலைகள் இல்லை என்று இடிந்து விழுந்த புதுக்கோட்டை சாலையே முதலமைச்சரின் முகத்தில் ஆழமாகக்  கரி பூசியிருக்கிறது. போர்ஜரி சான்றிதழ் கொடுத்து டெண்டர் எடுத்த அதிமுகவினரின் கம்பெனிக்கு உலக வங்கியே தடை போட்டிருக்கிறது.

“ஆன்லைன் டெண்டர்” பற்றி முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆன் லைன் டெண்டர் யாரால் போட முடிகிறது? எப்படியெல்லாம் நிபந்தனைகள் வைத்து போட்டியாளர்கள் நீக்கப்படுகிறார்கள்? அமைச்சர்களின் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி டெண்டர்கள் வழங்கப்படுகின்றன?  என்பது எல்லாம் ஏற்கனவே எங்கள் தலைவரின் கைக்கு துறை வாரியாக  வந்து சேர்ந்து விட்டது. இந்த கொள்ளையாட்சி - கேடுகெட்ட ஆட்சி முடிந்த பிறகு அனைத்தும் நிச்சயம் அம்பலத்திற்கு வந்தே தீரும். 

ஒவ்வொரு அமைச்சராக சிறை செல்ல தயாராக இருக்க வேண்டியதிருக்கும். ஒரு வேளை முதலமைச்சர் அவசரப்பட்டால்- அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற பணிகள் குறித்த ஆன்லைன் டெண்டர்கள் குறித்து இப்போதே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? தன் ஊழலுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல்- ஏழு வருடம் கழித்து தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஊழல் என்கிறார் முதலமைச்சர். தைரியமிருந்தால் வழக்குப் போடுங்கள்.  அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். 

அரசு ஊழியர்களுக்கு (Govt Servant) உள்ள விதிகளை சுட்டிக்காட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின் படி பொது ஊழியராக (Public Servant) இருக்கும் முதலமைச்சர் “தன் ரத்த உறவுகளுக்கு டெண்டர் கொடுக்கவில்லை” என்கிறார். ஆனால், “முதலமைச்சரின் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அரசின் தலைமை வழக்கறிஞரே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் சொல்வது முதலமைச்சர்தான் என்பது உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது. “ராமலிங்கம் அன்ட் கோ” தி.மு.க. ஆட்சியில் இருந்தவர்கள் யாருக்கும் சம்பந்தியில்லை. 

TR Balu Statement Against Edappadi Palanisamy

அவர்கள் தி.மு.க. ஆட்சியில் டெண்டர் எடுத்திருந்தால் தவறு இல்லை. ஆனால் முதலமைச்சர் தனது சம்பந்திக்கு உள்நோக்கத்தோடு டெண்டர் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்ல முதலமைச்சருக்கு அறவே வக்கில்லை.

ஞான சூனியமான ஊழல் முதலமைச்சருக்கு எங்கள் கழகத் தலைவரின் தகுதி பற்றிப் பேச துளி கூட அருகதை இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய இலக்கணத்தோடு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பெற்றவர் எங்கள் தலைவர். எங்கள் தலைவர் அரசியலில் நேர்மையை சம்பாதித்தார். 

நீங்கள் சி.பி.ஐ. விசாரணையை மூட்டை மூட்டையாகச் சம்பாதித்து வைத்துள்ளீர்கள்.  டெண்டர் ஊழல்களின் வண்டவாளம் எல்லாம் சி.பி.ஐ. விசாரணையில் தண்டவாளத்தில் ஏறும்போதும், 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பில் இந்த ஆட்சி ஆட்டம் கண்ட பிறகும் எங்கள் தலைவரின் தகுதி எடப்பாடி பழனிச்சாமியின் கண்களுக்கு - மட்டுமல்ல அதிமுக அமைச்சரவையில் உள்ள ஊழல் அமைச்சர்கள் எல்லோரின் கண்களுக்கும் நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து “எதிர்க்கட்சித்தலைவருக்குத் தகுதி இல்லை” என்று “கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார்” எனக் கூறிய  எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவிக்கு நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட லாயக்கில்லைதான். ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி, வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கள் தலைவர் பற்றிப் பேசுவதற்கு முன்பு நாவடக்கம் தேவை என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்!

Follow Us:
Download App:
  • android
  • ios