Asianet News TamilAsianet News Tamil

பக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்...!! திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...!!

“கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம் துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.

stalin statement regarding reservation for vanniyar community,
Author
Chennai, First Published Oct 8, 2019, 12:03 AM IST

தி.மு.க ஆட்சியமைந்தவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

stalin statement regarding reservation for vanniyar community, 

‘திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம் துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். போராட்டக்களத்தில் நின்றவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக முதலமைச்சரானவுடன் 28.3.1989 அன்று வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி. மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார். முதன் முதலில் ராஜ்மோகன் என்ற வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியை தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக நியமித்தார்.

stalin statement regarding reservation for vanniyar community,

1996-ல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’அறிவித்தார்.சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்றுவரை அந்தக் குடும்பங்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு, சென்னை - கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச் சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் கருணாநிதி என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.முதன் முதலில் வன்னியரான திண்டிவனம் வெங்கட்ராமனை, கேபினட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சராக்கியவர் கருணாநிதிதான் என்பதை நாடறியும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான், முதலமைச்சர் அலுவலகத்தில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ்,முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டு - பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் அமர வைக்கப்பட்டார்.புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கோ நியமிக்கப்பட்டார்.

stalin statement regarding reservation for vanniyar community,

வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க கழக ஆட்சியில்தான், "வன்னியர் நல வாரியம்" அமைக்கப்பட்டு அதற்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் முதல் தலைவராகவும், பிறகு ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ் இரண்டாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ், மாநிலத் தேர்தல் ஆணையராக கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். கருணாநிதி ஆட்சியில் வன்னியர் சமுதாயத்திற்கான இன்னும் எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும். ஆனால், இந்த எட்டாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், அப்படி வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா? இல்லவே இல்லை. ஆனால் இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.

stalin statement regarding reservation for vanniyar community,

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப் பெருந்தலைவராகவும், அண்ணாவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கருணாநிதி அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, "ஏஜி"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கருணாநிதி தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios