Asianet News TamilAsianet News Tamil

அடடே... ஆச்சரியம்! ஸ்டாலின் போராட்டத்துக்கு அழகிரி ஆதரவாளர்கள் ஆதரவு!

mk azagiri supporters support stalin protest on black day in madurai
mk azagiri supporters support stalin protest on black day in madurai
Author
First Published Nov 8, 2017, 5:57 PM IST


கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் சென்ற வருடம் இதே நாளில் பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். ரூ.500 ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று கூறினார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், அவற்றால் சாதாரண மக்களின் இன்னல்களைத் தீர்க்க இயலவில்லை. சுமார் மூன்று மாதங்கள் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். பின்னர் ஒருவாறு மீண்டு, சகஜ நிலை திரும்பியது என்றாலும், தங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க, வெகு நேரம் ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடந்து, நினைத்த படி செலவழிக்க இயலாமல் பெரிதும் துன்பப் பட்டனர். 

இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதால், நவ.8 இந்த தினத்தை கருப்பு தினமாக காங்கிரஸாரும், எதிர்க்கட்சிகளும், திமுக.,வும் இங்கே கடைப்பிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

சென்னையில் மழை பெய்து பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட மழை பாதித்த 8 மாவட்டங்கள் நீங்கலாக, இந்த ஆர்ப்பாட்டங்களை திமுக.,வும் நடத்தியது. சென்னையில் இருந்து தன் போராட்டக்களத்தை இதனால் மாற்றிக் கொண்ட திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், மதுரைக்கு மாற்றிக் கொண்டார். 

மதுரையில் திமுக.,வில் கோலோச்சுபவர் மு.க. அழகிரி. அங்கே அழகிரியின் ஆதரவாளர்கள் அதிகம். ஸ்டாலின் மதுரையில் போராட்டம் நடத்தச் சென்றபோது, ஆச்சரிய கரமாக, மு க ஸ்டாலின் போராட்டத்திற்கு பேஸ்புக் சமூக வலைத்தளங்களில்  முக அழகிரி ஆதரவாளர்கள் ஆதரவு  தெரிவித்துள்ளனர். 

கருப்பு தின போராட்டத்திற்கு முக அழகிரி ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் பதிவு செய்தது வித்தியாசமாகத்தான் இருந்தது. வழக்கமாக மதுரையில் கோலோச்சுவது அண்ணன் அழகிரியின் போஸ்டர்கள் தான். போஸ்டர் அரசியல் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள் அழகிரி ஆதரவாளர்கள். ஆனால் இம்முறை போஸ்டர் அடிக்காமல், பேஸ்புக்கில் முகம் காட்டியுள்ளனர்.  மு.க. அழகிரியின் மதுரை ஆதரவாளர் ஒருவர் ஸ்டாலின் நடத்திய கருப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கருப்பு சட்டை அணிந்த படி முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனும் உடன் உள்ளார்.  மேலும் ‘அண்ணன் வழியில் சென்றாலும் அநீதிக்கு எதிராக என்றும் குரல் கொடுப்போம்’ என்று மறக்காமல் வாசகத்தைப் பதிவு செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios