Asianet News TamilAsianet News Tamil

ஆதரவாளர்கள் கைது எதிரொலி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்திக்கிறார் தினகரன்..!

dinakaran will meet tamilnadu CEC rajesh
dinakaran will meet tamilnadu CEC rajesh
Author
First Published Dec 11, 2017, 10:44 AM IST


ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக தனது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தினகரன் சந்திக்க உள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் சுயேட்சையாக தினகரனும் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 59 வேட்பாளர்கள் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.

திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் ஒவ்வொரு வகையில், தங்களது வலிமையை நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. எனவே இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், இந்த முறை பணப்பட்டுவாடாவைத் தடுத்து தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஆனாலும் பணப்பட்டுவாடா படு ஜோராக நடந்துவருவதாக குற்றம்சாட்டிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக வேட்பாளருடன் சாலை மறியல் செய்தார். இந்நிலையில், பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலை 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில், பணப்பட்டுவாடா செய்ததாக நள்ளிரவில் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தினகரன் முறையிட உள்ளார். அதற்காக இன்று 11 மணி முதல் ஒரு மணிக்குள் தினகரன், ராஜேஷ் லக்கானியை சந்திக்க உள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios