Asianet News TamilAsianet News Tamil

“காந்தி, நேரு, இந்திரா எல்லாம் குப்பைகளாம்”......பா.ஜனதா எம்.பி. பேச்சால் “வெடித்தது சர்ச்சை” : காங்கிரஸ் கடும் கண்டனம்....

bjp mp speech about cogress leaders
bjp mp speech about  cogress leaders
Author
First Published Oct 23, 2017, 7:17 PM IST


மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரை குப்பைகளுடன் ஒப்பிட்டு பேசிய அசாம் மாநில, பா.ஜனதா எம்.பி. கமாகாய பிரசாத் தசாவால் பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

இதையடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா எம்.பிக்கு எதிராக போலீசில் புகார் செய்து, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல் அமைச்சராக சர்பானந்த சோனாவால் செயல்பட்டு வருகிறார்.

 இந்நிலையில், சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சோனாரி எனும் இடத்தில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் சர்பானந்த சோனாவால், பா.ஜனதா எம்.பி. கமாகாய பிரசாத் தசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய கமாகாய பிரசாத் தசா, “ஆர்.எஸ்.எஸ். தலைவர் தீனதயால் உபாத்யாயாவின் சித்தாந்தங்களை அறிந்து கொள்ளாமல், காந்தி, நேரு, இந்திரா போன்ற குப்பைகளைக் கொண்டு மக்களின் மூளையை காங்கிரஸ் சலவை செய்துவிட்டது. மற்ற எந்த தலைவர்களின் கருத்துக்களையும் மக்களின் மூளையில் புகுத்தாமல், இதுபோன்ற குப்பைகளின் கருத்துக்களை காங்கிரஸ் புகுத்திவிட்டது” என்று மரியாதை குறைவாகப் பேசினார்.  மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் சர்பானந்த சோனாவாலும் இவரின் பேச்சுக்கு, எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து, கவுகாத்தி போலீசில் எம்.பி. கமாகாய பிரசாத் தசா மீது புகார் அளித்தது.

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, தேசப்பிதா மகாத்மா காந்தி ஆகியோரை மிகவும் அவமரியாதை செய்த எம்.பி. பிரசாத் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தது. இதையடுத்து, எம்.பி. மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கமாகாய பிரசாத் தசாவின் உருவபொம்மைகளை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எரித்து தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.

பா.ஜனதா எம்.பி. கமாகாய பிரசாத் தசா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். ஜோர்காட் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக முதல் முறையாக தேர்வாகியுள்ள இவர், தேயிலை தொழிலாளர்கள் சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios