Asianet News TamilAsianet News Tamil

5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் ? பதற்றத்தில் பாஜக… எதிர்பார்ப்பில் காங்கிரஸ் !! 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் !!

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதில் யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே நேரத்தில் கருத்துக் கணிப்புகளால் கலங்கிப் போயுள்ள பாஜக பெரும் பதற்றத்தில்  உள்ளது.

5 state election result today
Author
Hyderabad, First Published Dec 11, 2018, 6:24 AM IST

சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90  தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12, 20ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில், 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் ஆளும் பாஜ, காங்கிரஸ்  வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28ம் தேதி ஒரே கட்டமாக  நடைபெற்ற தேர்தலில், 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து பாஜ  தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. 
5 state election result today
இப்போது 4வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக  தீவிர பிரசாரம் மேற்கொண்டது. எனினும், இவ்விரு மாநிலங்களிலும் பாஜவுக்கும்  காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி இருக்க வாய்ப்புள்ளதாக ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்  கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

5 state election result today

பாஜக ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7ம்  தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.  மாநிலத்தில் மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு  உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

 

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ்  ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். 
5 state election result today
இம்மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக  கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட  தெலங்கானாவில், கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 சதவீத  வாக்குகள் பதிவாகின. தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் தெலங்கானா  ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் - தெலங்கானா  ஜன சமிதி - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன.  இருந்தும் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள்  தெரிவிக்கின்றன.



இந்நிலையில், இன்று  காலை 8  மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இதையொட்டி, 5   மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்   செய்யப்பட்டுள்ளன.

 

தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து  கொள்ள வசதியாக தேர்தல்  ஆணைய இணையதளத்தில் அவ்வப்போது முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி சேனல்களும் நேரடி ஒளிப்பரப்பில் நாளை காலை 6 மணி முதலே  களநிலவரத்தை வெளியிட உள்ளன.

5 state election result today

காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் முழுமையாக  தெரிந்துவிடும். மாலை 3 மணிக்குள் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று  தெரியவரும். 
 

மொத்தத்தில், 5 மாநிலங்களிலும் 678 தொகுதிகளுக்கான எம்எல்ஏக்கள் தேர்வு   செய்யப்படவுள்ளதால், அவர்கள் யார் யார் என்ற விபரம் மாலைக்குள்  தெரிந்துவிடும் என்பதால்,  இன்று அதற்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கியுள்ளது.

 

பாஜக சட்டீஸ்கர், ராஜஸ்தான்,  மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில்  மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா,  தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி, மிசோரமில்  காங்கிரஸ் கட்சி ஆகியவை மீண்டும் ஆட்சியை  கைப்பற்றுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. 

அதே நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக சில மாநிலங்களை இழக்கும் என தெரிய வந்துள்ளதால் அக்கட்சி பெரும் பதற்றத்தில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios