கணவரை மீட்டுத் தரவேண்டி ஆட்சியரிடம் முறையிட்ட மனைவி… - NewsFast
NewsFast Logo

கணவரை மீட்டுத் தரவேண்டி ஆட்சியரிடம் முறையிட்ட மனைவி…

மலேசியாவில் வேலை செய்யும் தனது கணவர் உயிருக்கு, அவரை அழைத்துச் சென்ற முகவர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது

மலேசியாவில் வேலை செய்யும் தனது கணவர் உயிருக்கு, அவரை அழைத்துச் சென்ற முகவர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும், அவரை மீட்டுத்தர வேண்டும் எனவும் ஆட்சியரிடம் அவரது மனைவி முறையிட்டுள்ளார்.

நாமக்கல் அருகே வேட்டாம்பாடி குடித்தெருவைச் சேர்ந்தவர் வி.சுசீலா. இவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் வெள்ளிக்கிழமை மனு ஒன்றை அளித்தார்.

சுசீலாவின் கணவர் வெங்கட்ராமன், கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்காக மலேசியா நாட்டுக்குச் சென்றார்.

மலேசியாவில் உறவினர்கள் வேலு, சுகுமார், கலையரசன் ஆகியோர் அவரை அங்கு அழைத்துச் சென்றனர். 

வேலைக்குச் சென்ற 2 ஆண்டுகளிலேயே தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும் இந்தியா திரும்ப வேண்டும் எனவும் வெங்கட்ராமன் கூறியுள்ளார். ஆனால், வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும், அடிமைபோல் நடத்துவதாக தொலைபேசியில் சுசீலாவிடம் தெரிவித்துள்ளார்.

மாதம் ரூ.10000 முதல் ரூ.15000 வரை பணம் அனுப்பிய வெங்கட்ராமன் கடந்த 10 மாதங்களுக்கு மேல் வீட்டுக்குப் பணம் அனுப்புவதில்லை. 

இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி, மனைவிக்கு செல்லிடபேசியில் தொடர்பு கொண்ட வெங்கட்ராமன், அங்கு வேலை செய்ய முடியவில்லை, இந்தியா திரும்ப அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

இதனைத் தொடர்ந்து சுசீலா, வெங்கட்ராமனை வேலைக்கு அழைத்துச் சென்றவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு பல முறை தொடர்பு கொண்டும் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. 

கணவர் நிலை தெரியாமல் இரண்டு பெண் குழந்தைகளோடு தவிக்கும் தனக்கு மாவட்ட ஆட்சியர் உதவிட வேண்டும் என்றும், வேலைக்கு அழைத்துச் சென்ற முகவர்கள் மீது நடவடிக்கையெடுத்து, கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் முறையிட்டார்.

NewsFast Logo