இரயில் என்ஜின் மோதியதில் வயிற்றில் இருந்து, வெளியே சிதறிய கன்றுகுட்டிகள் - Asianet News Tamil
NewsFast Logo

இரயில் என்ஜின் மோதியதில் வயிற்றில் இருந்து, வெளியே சிதறிய கன்றுகுட்டிகள்

இராமநாதபுரம் அருகே இரயில் என்ஜின் மோதியதில், 8 பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. இதில், சினையாக இருந்த பசுமாடுகள், இரயில் என்ஜின் மோதியதில் வயிற்றில் இருந்த கன்றுகுட்டிகள் சிதைந்து வெளியே சிதறி கிடந்தன.

இராமநாதபுரம்,

இராமநாதபுரம் அருகே இரயில் என்ஜின் மோதியதில், 8 பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. இதில், சினையாக இருந்த பசுமாடுகள், இரயில் என்ஜின் மோதியதில் வயிற்றில் இருந்த கன்றுகுட்டிகள் சிதைந்து வெளியே சிதறி கிடந்தன.

இராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் அருகே உள்ள இராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இராமு. இவர் தனது வீட்டில் 10 பசுமாடுகளை வைத்து வளர்த்து வந்தார். இவற்றின் மூலம் பால் வியாபாரமும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை இராமுவின் மனைவி வீட்டில் இருந்த மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் இராம்நகர் இரயில் தண்டவாளத்தின் மறுபுறம் வளர்ந்துள்ள புல்வெளியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது 10 மாடுகள் ஒன்றாக தண்டவாளத்தை கடந்து மறுபுறம் உள்ள புல்வெளியை நோக்கிச் சென்றுள்ளன.

அப்போது, பரமக்குடியில் இருந்து இராமேசுவரம் நோக்கி தண்டவளாங்களை சரிசெய்தபடி சென்ற சோதனை இரயில் என்ஜினில் தண்டவாளத்தை கடந்த 8 மாடுகள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

இரண்டு மாடுகள் படுகாயமடைந்து துடிதுடித்து கொண்டிருந்தன.

இதை கண்ட இராமுவின் மனைவி அலறி துடித்துள்ளார். ஒரு சில மாடுகள் சினையாக இருந்ததால் இரயில் என்ஜின் மோதியதில் வயிற்றில் இருந்த கன்றுகுட்டிகள் சிதைந்து வெளியே சிதறி கிடந்ததை கண்ட இராமுவின் மனைவி அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார்.

இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அங்கு விரைந்து ஓடிவந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது தூரம் சென்றதும் இரயிலை நிறுத்திய இரயில் என்ஜின் ஓட்டுநர் அங்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துவிட்டு இரயில் என்ஜினை இயக்கி சென்றுவிட்டார்.

பசுமாடுகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு பலியானதை தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ராமேசுவரம் இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsFast Logo