இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் பால் விலையை உயர்த்த கோரிக்கை… - NewsFast
NewsFast Logo

இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் பால் விலையை உயர்த்த கோரிக்கை…

நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.5,

நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.5, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.10-ம் உயர்த்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.

வேளாண் இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், துணை இயக்குநர் லோகநாதபிரகாசம், மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“கடும் வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கு உலர், பச்சை மற்றும் அடர் தீவனங்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.

வறண்ட கிணறு மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளை ஆழப்படுத்த வங்கிக் கடன் வழங்க வேண்டும்.

பரமத்திவேலூர் ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள ஆண்டு பயிர்களைப் பாதுகாக்க 500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு மேல் காவிரி ஆற்றில் முறை வைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும்.

கொல்லிமலை அடிவாரத்தில் விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிப்படைகிறது.

கடந்த காலத்தைப் போல், டீசல் பம்ப்செட் மூலம் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். மோகனூர் - சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

வைக்கோல் கட்டு ரூ.70-இல் இருந்து ரூ.200 ஆகவும், சோளத்தட்டு ரூ.200-இல் இருந்து ரூ.1000 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. கலப்புத்தீவனம் 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால், பால் விலை மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதனால் பசும்பால் லிட்டருக்கு ரூ.5, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.10-ம் உயர்த்த வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியை தேர்வு செய்து, நீர் வழி, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மாதிரி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.

ராசிபுரம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகளை வைப்பதால் அருகில் உள்ள விவசாயக் கிணறுகள், குடியிருப்புகள் பாதிப்படைகின்றன. அதனால், கல் குவாரிகள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வைத்தனர்.

NewsFast Logo