‘மோடியைப் பார்த்து உலகமே சிரிக்கிறது’ - ராகுல்காந்தி கொந்தளிப்பு - Asianet News Tamil
NewsFast Logo

‘மோடியைப் பார்த்து உலகமே சிரிக்கிறது’ - ராகுல்காந்தி கொந்தளிப்பு

நாட்டுக்கு நல்லகாலம், 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் வரும். ரூபாய் நோட்டு விவகாரத்தால், சர்வதேச அளவில் இந்தியப் பிரதமர்

‘ நாட்டுக்கு நல்லகாலம், 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் வரும். ரூபாய் நோட்டு விவகாரத்தால், சர்வதேச அளவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கேலிக்குரியவராக மாறி இருக்கிறார். மோடியைப் பார்த்து உலகமே சிரிக்கிறது ’ என்று ரூபாய் நோட்டு தடை எதிராக டெல்லியில் நேற்று நடந்த மாநாட்டில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 

ஜன்தன் மாநாடு

ரூபாய் நோட்டு தடைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் ‘ஜன் வேதனா’(பொதுமக்கள் வேதனைகள்) என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் உள்ள தல்கோத்ரா அரங்கில் நேற்று நடந்தது. 

தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கட்சியின் மூத்ததலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் ராகுல்காந்தி பேசியதாவது-

சிரிப்பு பிரதமர்

நாட்டில் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை தடை செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி எடுத்த முடிவு என்பது ஆழ்ந்து சிந்திக்காமல் எடுத்த முடிவு. இந்த முடிவால், இந்திய பிரதமர் ஒருவர் முதல் முறையாக சர்வதேச அளவில், கேலிக்குரியவராக மாறி இருக்கிறார். தன்னிச்சையான முடிவு 

உலகில் உள்ள எந்த ஒரு பொருளாதார நிபுனரும், பிரதமர் மோடியின் முடிவு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு என்று கூறவில்லை, வரவேற்கவில்லை. ரூபாய் நோட்டு தடை முடிவு என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட முடிவாகும். 

16 ஆண்டு பின்னோக்கி

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், நாட்டின் பொருளாதாரம் கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்தங்கிச் சென்றுவிட்டது. வாகனங்கள் விற்பனை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது. 

2.5 ஆண்டுகளில்?

இந்த நாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததைய, பாரதியஜனதா  அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டதா?.பலவீனம்

 பாரதியஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி ஆகியோரின் செயல்பாடுகளால்  ரிசர்வ் வங்கி, நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடு மிகவும் பலவீனமடைந்து விட்டது. 

காங்கிரஸ் கட்சி இந்த துறைகளை எல்லாம் நன்றாகக் கட்டிக் காத்தது. இந்த துறைகள் எல்லாம் நாட்டின் ஆன்மாவைக இருந்தன. ஆனால், இவற்றை மோடி அரசு தரக்குறைவாக நடத்திவிட்டது. 

அகம்பாவம்

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ரிசர்வ் வங்கியின் சுயாட்சிக்கு மதிப்பளித்தோம். இந்தியாவின் நிதித்துறை அடித்தளம் ரிசர்வ் வங்கி. ஆனால், இப்போது, அது கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது.  ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா அமைப்பில் இருப்பவர்கள் யாரிடமும் கருத்துக் கேட்பதில்லை என்ற மனநிலையில் இருந்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினர் அகம்பாவத்துடன், தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்ற மனநிலையுடன் செயல்படுகிறார்கள். 

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டம், திறன் இந்தியா திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பின்னால் நீண்டநாட்கள் ஒளிந்து கொள்ள முடியாது. 

தனக்குத்தானே கேள்வி?

ரூபாய் நோட்டு தடைக்குபின் நாட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து மோடி உணர்வது அவசியம். ஏன் வாகன விற்பனை சரிந்துவிட்டது, ஏன் தொழிலாளர்கள் வேலை இழந்து சொந்த ஊர்களுக்கு சென்றார்கள் என்பதை மோடி தனக்குத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் ‘அச் ஹே தின்’(நல்லகாலம்பொறக்குது) வந்துவிடும் என்று கூறியிருந்தார். ஆனால், இதுவரை அந்த நல்லகாலத்தை  இப்போதுள்ள நிலையில் பார்க்க முடியாது. உண்மையில், நாட்டுக்கு நல்லகாலம் 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதுதான் பிறக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

NewsFast Logo