கிராம தெய்வங்களின் படங்கள் வைத்து ஜல்லிக்கட்டு நடக்க யாகம்… - NewsFast
NewsFast Logo

கிராம தெய்வங்களின் படங்கள் வைத்து ஜல்லிக்கட்டு நடக்க யாகம்…

அலங்காநல்லூரில், இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று வாடிவாசல் முன்பு கிராம தெய்வங்களின் படங்கள் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரில், இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று வாடிவாசல் முன்பு கிராம தெய்வங்களின் படங்கள் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

அலங்காநல்லூரில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விழா வழக்கமாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் உலக புகழ் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தடையினால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்கள் அனைவரின் மத்தியில் இருந்தும் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டை நடத்த கோரிக்கைகளை விடுத்து வருகின்றன.

இதனையடுத்து தைத்திருநாள் அடுத்த மாதம் வருகிறது. இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் என்று காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், மக்கள் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

தற்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நடைபெற வேண்டி, அலங்காநல்லூர் மக்கள் சார்பில் சிறப்பு யாக வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அங்குள்ள வாடிவாசல் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் அலங்கார விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், முனியாண்டி, ஐய்யனார் சாமி மற்றும் அனைத்து கிராம தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டு, மகா ருத்ரயாகங்கள், மகா கணபதி, தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பின்னர், மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் முத்தாலம்மன், முனியாண்டி, ஐய்யனார் சாமி உள்ளிட்ட கோவில்களுக்கு எடுத்துக் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு கோவில்களில் உள்ள சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

இதில் கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் 504 திருவிளக்கு வழிபாடும் நடந்தது.

முன்னதாக அலங்காநல்லூரில், பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக, ஜல்லிக்கட்டுக் காளை உருவத்தை வண்ணக்கோலமாக வரைந்திருந்தனர்.

NewsFast Logo