ரூ.1500 இலஞ்சம் வாங்கிய அலுவலருக்கு 17 வருடங்கள் கழித்து தண்டனை… - NewsFast
NewsFast Logo

ரூ.1500 இலஞ்சம் வாங்கிய அலுவலருக்கு 17 வருடங்கள் கழித்து தண்டனை…

நாமக்கல்லில், 1999-ஆம் வருடம் ரூ.1500 இலஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை முன்னாள் அலுவலருக்கு, 17 ஆண்டுகள் கழித்து சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

நாமக்கல்,

நாமக்கல்லில், 1999-ஆம் வருடம் ரூ.1500 இலஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை முன்னாள் அலுவலருக்கு, 17 ஆண்டுகள் கழித்து சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (46). கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர். இவரது சகோதரர் சுப்பிரமணி. இவருக்கு சொந்தமான வீடு ஜி.எம்.கே. நகரில் உள்ளது. இந்த வீட்டை பட்டு வளர்ச்சித் துறைக்கு வாடகைக்கு விட முடிவு செய்தனர்.

இதற்கு வாடகை நிர்ணய சான்றிதழ் பெற பொதுப்பணித் துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்திற்கு துரைசாமி சென்றார். அங்கு அப்போது பணியில் இருந்த முதுநிலை வரைவாளர் நாராயணன் என்கிற நாராயணசாமி (70) வாடகை நிர்ணய சான்றிதழ் வழங்க ஒரு மாத வாடகை, அதாவது ரூ.2550 இலஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு துரைசாமி மறுத்து விட்டார்.

இதையடுத்து ரூ.1500 இலஞ்சம் தந்தால் மட்டுமே வாடகை நிர்ணய சான்றிதழ் அளிக்க முடியும் என நாராயணசாமி கூறினார்.

இலஞ்சம் கொடுக்க மனம் இல்லாத துரைசாமி இது குறித்து இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கடந்த 1999–ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ஆம் தேதி துரைசாமி ரூ.1500 இலஞ்ச பணத்தை நாராயணசாமியிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் நாராயணசாமியை கைது செய்தனர்.

இதற்கிடையே நாராயணசாமி தான் வாங்கிய இலஞ்ச பணத்தில் ரூ.500–ஐ அப்போதைய இளநிலை வரைவாளர் மனோன்மணி என்பவரிடம் கொடுத்தார். இதனால் அவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் இருவர் மீதும் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கல் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றம் சாட்டப்பட்ட பொதுப்பணித்துறை முன்னாள் அலுவலர் நாராயணசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். குற்றம் நிரூபிக்கப்படாததால் மனோன்மணி விடுவிக்கப்பட்டார்.

NewsFast Logo