விபத்துகளைத் தடுக்க காவலாளர்கள் கிடுக்குப்பிடி: 934 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு… - NewsFast
NewsFast Logo

விபத்துகளைத் தடுக்க காவலாளர்கள் கிடுக்குப்பிடி: 934 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு…

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 603 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 45 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 25 பேர் மற்றும் மற்ற வழக்குகள் 261 என மொத்தம் ஒரே நாளில் 934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கரூர்,

அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்க தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 603 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 45 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 25 பேர் மற்றும் மற்ற வழக்குகள் 261 என மொத்தம் ஒரே நாளில் 934 வழக்குகள் பதிவு செய்து கிடுக்குப்பிடி போட்டனர்.

கரூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்துகளை தடுக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு ராஜசேகரன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

ஆனாலும், வாகன விபத்துகள் குறையவில்லை. இந்த நிலையில் தலைக்கவசம் அணியாமல், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவலாளர்கள் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 603 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோன்று அதிவேகமாக வாகனம் ஓட்டிய 45 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 25 பேர் மற்றும் மற்ற வழக்குகள் 261 என மொத்தம் ஒரே நாளில் 934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இவர்களிடமிருந்து ரூ.1 இலட்சத்து 59 ஆயிரத்து 200 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் சூப்பிரண்ட், “கரூரில் வாகன விபத்துகளால் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு சாலை விதிகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இனி தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

NewsFast Logo